சித்தத்தை சிவமயம் ஆக்கும்.. பித்தத்தை தெளிவாக சிவமாக்கும்!

Su.tha Arivalagan
Feb 16, 2026,11:59 AM IST

- பா. பானுமதி


சித்தர்கள் போற்றும் சிவராத்திரி 

பக்தர்களை ஏற்கும் சிவராத்திரி

சித்தத்தை சிவமயம் ஆக்கும்

பித்தத்தை தெளிவாக சிவமாக்கும் 

சுத்தத்தை சொல்லி ஒளிரும் 

மொத்தத்தில் சூரியனாய் ஜொலிக்கும் 


நாள்தோறும் வருவது நித்ய சிவராத்திரி 

திதிகளில் வருவது பட்ச சிவராத்திரி 

மாதத்தில் வருவது மாத சிவராத்திரி 

யோகத்தை தரும் யோக சிவராத்திரி 

ஞானத்தை தரும் ஞான சிவராத்திரி 

அத்தனைக்கும் மேலே அண்டத்தையே 

அலங்கரிக்கும் மகா சிவராத்திரி 

அண்டத்தில் உள்ளது தானே பிண்டத்தில் உள்ளது 

அண்டம் அற்புதமான அமைப்பை பெரும்போது 

ஆற்றலில் குளிக்கும் போது அதனை பிண்டமும் பெற 

அவசியம் வேண்டும் விழிப்பும் இருளும்




இருள் என்றும் இதமானது 

இதயத்திற்கு சுகமானது 

சிந்தனைக்கு பலம் சேர்ப்பது 

அகந்தைக்கு அடி கொடுப்பது 

ஆணவத்தின் பிடி விடுவது 

பேராசையின் பேரழிவு சொல்வது 

இருளில் அச்சம் வரும் 

அச்சத்திலே மிச்சம் தெரியும் 

மிச்சம் என்பது அறமும் 

இறைவன் அளித்த வரமும் மட்டுமே 

பணம் புகழ் பெயர் ஆளுமை அதிகாரம் என்று 

எதுவும் இருளிலே கரம் கொடுக்காது உள்ளதை உள்ளபடி 

உள்ளத்தை பக்குவமாக்குவது இருள்தான் 

அதனால் சிவதாண்டவமும் இருளிலே அரங்கேறி 

நம் ஆக இருள் விரட்டி அமைதி தரும் 


பிரபஞ்சத்தில் நிகழும் பேரமைதியில் 

நம் பிரச்சனைகள் தீர தெளிவு பிறக்கும் 

மௌனம் தியானம் விழிப்பு நம் நிலையை உணர்த்தும் 

விழித்திருந்தாலே அழிவிலிருந்து மீள முடியும் 

அதற்கான ஒத்திகையே இந்த மகா சிவராத்திரி 


அகத்தியர் முதல் அத்தனை சித்தர்களும் கொண்டாடிய சிவராத்திரி 

அரசன் முதல் ஆண்டி வரை பண்பாடும் சிவராத்திரி 

சிவன் என்றாலே மங்களம் 

நம் சிந்தையை நிறைக்கும் மங்கலம் 

பவம் போக்கி அவம் நீக்கி 

தவத்தின் மேன்மையை சொல்லும் சிவராத்திரி 

ஆர்ப்பாட்டம் என்றும் அமைதியை தராது

அமைதியே என்றும் ஆனந்தம் 

ஆனந்தம் என்பது தன்னை உணர்வது

அதுவே பேரானந்தம்

அமைதி ஆராதனை இருள் ஈடில்லா சிவன் 

உண்மை உணர்தல் ஊழி பற்றி அறிதல் எண்ணம் தூய்மையாக்கல் 

ஏழ் பிறவிக்கும் எளிமை 

ஐயம் களைதல் ஒப்பு உயர்வு அறிதல் 

ஓங்காரம் புரிதல் ஔடதமின்றி வாழ்தல் 

சிவராத்திரி எங்கும் மங்கலம் பொங்கட்டும் 

எதிலும் சிவமயம் தங்கட்டும்

சிவ சிவ மயமே பயமில்லை என்று சொல் 

மனமே சிவசிவ சிவ நாமம் 

ஓம் நமச்சிவாய


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)