சூரிய சந்திரன்!
- பா.பானுமதி
சுடர்விடும் சூரியனே...!
உனை சுற்றி வரும் புன்னகைக்கும்
பூமி அல்ல நான்...
வளமிகு புவியைச்சுற்றி வரும்
வண்ணநிலா நான்...
ஒளியை உன்னில் வாங்கி ஒளிந்தாலும்
உனக்கு உரியவள் அல்ல நான்...
ஒளியால் ஒன்றுபட்டாலும்
பல வழியில் வேறுபடுவோம்...
நீ வரும் நேரம் உன்னொளியில்
நான் ஒளிந்து கொள்வேன்...
நான் வரும் வேளையில்
நீ விரைவாக சென்று விடுவாய்...
நீ வரும் போது நான் மறைவதும்
நான் தெரியும் போது நீ செல்வதும்
இயற்கை விளையாட்டு...
இருவரும் ஒரு நாள் இணைந்தால்
அன்று ஏற்படும் அமாவாசை....
காரிருளில் கவி பாட முடியாது...
கனிமொழி பேச இயலாது...
இருளில் இவ்வுலகில் உயிர்களின் இயக்கம் குறைகையில்
நாம் அரவணைக்கலாகாது....
பூமியைச் சுற்றி வருவதிலே சுகம் எனக்கு...
சூரியனைச் சுற்றினால் சுடும் அன்றோ...
வசீகரிக்கும் பூமியை வலம் வருவதே
என் வாழ்நாள் பணி எனக்கான அணி...
புவிஈர்ப்பினால் இயங்கும் என்னை உன்னொளியால்
வளைக்க முயலாதே...
பகலில் உன் பக்கம் இருப்பதால்
உனக்கு உரியவள் என பகல் கனா காணாதே...
சூரிய சந்திரன் சேர்க்கை சுத்தப்படாது!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)