அளவு!

Su.tha Arivalagan
Jan 13, 2026,01:23 PM IST

- பா பானுமதி


அளவுக்கு மீறிய எதுவும் 

ஆட்டிப்படைத்து அழிக்காமல் அடங்காது 

அளவின்றி அமைந்த எதுவும் 

ஆர்ப்பாட்டம் செய்யாமல் அலைக்கழிக்காமல் விடாது 

ஆனந்தம் குலைத்து ஆணவத்தை வளர்த்து 

அடக்கி மடக்கி போடும் 

அதிசயம் போல தோன்றி 

ஆளுமையை கெடுத்து அவலக் கூத்தாடும் 

ஆத்திரத்தை கிளப்பும் அலைபாய வைக்கும் 

பின் அடிமடியில் கை வைக்கும் 




அளவின்றி இருப்பவை எல்லாமே 

ஒரு நாள் அடையாளம் ஏதும் இன்றி போய்விடும் 

அளவுடன் இருப்பவையே அழகுடன் இருப்பவை

அளவுடன் இருந்தாலே அமைதி கலந்திருக்கும் 

அளவே அழகு அளவே அறிவு


அளவே அரண் அளவே நிம்மதி 

அளவை கடந்தால் அறிவும் மழுங்கிடும் 

ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாய் 

அகங்காரப் பேய்க்கு ஆளாக நேரிடும்.


அள்ளி அள்ளி பருகினாலும் ஆசை அடங்காது 

அளவோடு நின்றாலே வாழ்வு கசக்காது

கிடைப்பதில் திருப்தி கொள்வதே ஞானம் 

கட்டுப்பாடே மனிதர்க்கு என்றும் தியானம்.


மிதமிஞ்சிய எதுவும் விஷமாக மாறும் 

மிதமான வாழ்வே வரமாகத் தீரும் 

அளவே ஆனந்தம்... அளவே ஆரோக்கியம்... 

அளவே வாழ்வின் ஆதார ரகசியம்!