Nadavavi Kinaru: காஞ்சிபுரத்தில் இருக்கும் அதிசய நடவாவி கிணறு .. அப்படீன்னா என்ன?

Su.tha Arivalagan
Apr 17, 2026,05:46 PM IST

- பா. பானுமதி


காஞ்சிபுரம் என்றாலே கோவில்களின் நகரம் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அந்த நகரத்திற்கு அருகில் உள்ள ஐயங்கார்குளம் கிராமத்தில் அமைந்துள்ள நடவாவி கிணறு, தமிழர்களின் நீர்மேலாண்மைக்கும், கட்டிடக்கலை நுணுக்கத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.


நடவாவி கிணறு என்றால் என்ன?


பொதுவாக கிணறு என்றாலே மேலிருந்து கயிறு கட்டி நீர் இறைப்பதாகத்தான் இருக்கும். ஆனால், நடவாவி கிணறு என்பது மக்கள் உள்ளே நடந்து சென்று நீரைப் பயன்படுத்தும் வகையில் படிக்கட்டுகள் கொண்ட அமைப்பாகும். இதனை வாவி என்றும் அழைப்பர்.


இந்தக் கிணறு மற்ற சாதாரண கிணறு போன்றது அல்ல. தரைமட்டத்திற்கு கீழே சுமார் 20-30 அடி ஆழத்தில், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய 16 கால் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தூண்களில் புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோடை காலத்திலும் குளுமையாக இருக்கும் வகையில் இதன் அமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.




இந்தக் கிணற்றின் மிக முக்கியமான அம்சம் என்னென்னா வருடத்தில் 364 நாட்களும் இது நீரால் நிரம்பி, அந்த மண்டபத்தை முழுவதுமாக மறைத்திருக்கும். சித்ரா பவுர்ணமிக்கு முன்னதாக, மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள நீர் முழுவதும் வெளியேற்றப்படும்.


அன்று காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் இங்கிருந்து சுமார் 7 கி.மீ தொலைவு பயணித்து, இந்த நிலத்தடி கிணற்று மண்டபத்திற்கு எழுந்தருள்வார். பெருமாளுடன் சீதா, ராமர், லட்சுமணரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.


விழா முடிந்து பெருமாள் கிளம்பிய அடுத்த சில மணி நேரங்களிலேயே, கிணற்றின் அடிப்பகுதியிலிருந்து நீர் தானாகவே ஊறத் தொடங்கும். சில நாட்களில் அந்த 16 கால் மண்டபம் மீண்டும் நீருக்குள் மூழ்கிவிடும்.


ஐயங்கார்குளம் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது. வருடத்தில் ஒருமுறை மட்டுமே காணக் கிடைக்கும் இந்த நீருக்குள் உறையும் மண்டபத்தை தரிசிப்பது பெரும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. வரவிருக்கும் சித்ரா பவுர்ணமி அன்று, வாய்ப்புள்ளவர்கள் இந்த அதிசய நிகழ்வில் கலந்துகொண்டு, பெருமாளின் அருளையும், நம் முன்னோர்களின் வியக்கத்தக்க கட்டிடக்கலையையும் நேரில் கண்டு மகிழுங்கள்!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)