தீபாவளி கொண்டாட்டம்!
- பா.பானுமதி
தீபாவளி தொடங்கிவிட்டது. ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது. எல்லா கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
கடைத் தெருவில் தான் நிர்மலாவின் வீடு. துணிக் கடைகள், இனிப்புக் கடைகள், பட்டாசுக் கடைகள் என விதம் விதமாக. கடைகளில் எல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வந்து போக வியாபாரம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
அவற்றையெல்லாம் மாடி வீட்டு ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள் நிர்மலா. இந்த வீட்டில் இருந்து கொண்டு தான் தன் பிள்ளைகளை வளர்த்தாள். இதே தீபாவளி நேரங்களில் சிறுக சிறுக சேமித்த காசை எடுத்துக்கொண்டு தன் பிள்ளைகள் இருவர் கையும் இரு பக்கம் பிடித்தவாறு இந்த கடைத்தெருவுக்கு சென்று எங்கு விலை குறைவாக இருக்கிறதோ கேட்டு கேட்டு பேரம் பேசி வாங்கி தீபாவளி கொண்டாடியது நினைவுக்கு வந்தது.
இன்று இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். இந்த வீட்டை நன்கு வசதி செய்து கொடுத்து விட்டார்கள். வீட்டில் தேவையான அனைத்தும் இருக்கிறது. ஆனால் பிள்ளைகள் தான் யாரும் இல்லை. நிர்மலாவும் அவள் கணவர் மட்டுமே. அதனால் பட்டாசு இனிப்பு புது துணிமணிகள் என எதுவும் வாங்குவதில்லை.
தீபாவளியைக் கொண்டாடாமல் சாதாரண நாட்கள் போலவே அந்த நாட்களும் இருக்கும். சில வருடங்களாக இப்படியே தொடர்கிறது. இப்படி இந்த தீபாவளி கொண்டாட்டங்களை கடைத்தெருவில் பார்த்ததும் பழைய நினைவுகளில் நெஞ்சம் நனைய கண்கள் கண்ணீரில் நனைந்தது.
இப்படியே மனைவியை பார்த்து அவர் கணவருக்கும் மனம் கசந்தது. இன்று இந்த நிலை மாற்ற வேண்டும் என்று நினைத்தவர், நேராக கடைத்தெருவுக்கு சென்று நிறைய இனிப்புகளையும் காரமும் பட்டாசுகளையும் வாங்கினார். பார்த்துக் கொண்டே இருந்த நிர்மலா எந்த கேள்வியும் கேட்கவில்லை. கேட்க தெம்பும் அவளுக்கு இல்லை.
ஆனால்...
தீபாவளிக்கு முதல் நாள் நிர்மலாவை அழைத்துக் கொண்டு அந்த ஏரியாவில் உள்ள குழந்தைகள் விடுதிக்கு சென்றார்கள். அங்குள்ள குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் கொடுக்க அவர் கண்களில் மகிழ்ச்சி மின்னியது கண்டு நிர்மலாவின் நெஞ்சம் நிறைந்தது. அவள் கண்களில் மகிழ்ச்சி கலந்தது. இனிமேல் தீபாவளி இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டனர்.
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், சொற்பொழிவாளர். மதுரையைச் சேர்ந்தவர்)