விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!
தேனி: தமிழ் திரைப்பட உலகின் ‘இயக்குநர் இமயம்’ என்று போற்றப்படும் முன்னணி இயக்குநர் பாரதிராஜா அவர்களின் உடல், இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலகுண்டு காட்ரோடு பண்ணை வீடு வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கிராமியக் கலைகளையும், மண் வாசனையையும் தமிழ் சினிமாவின் அடையாளமாக மாற்றிய ஒரு சகாப்தம் இத்துடன் நிறைவடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதிராஜா, சிகிச்சை பலனின்றி நேற்று இயற்கை எய்தினார். அவரது மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும், தமிழகமும் சோகத்தில் மூழ்கியது.
பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்குப் பிறகு, அவரது உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. தமிழக அரசின் சார்பில், காவல்துறை மரியாதையுடன், குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு மற்றும் முக்கியப் பிரமுகர்கள் நேரில் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்கள், இயக்குநர்கள், பல்துறைப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மண்ணின் மைந்தரான பாரதிராஜாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு இறுதிச் சடங்குகள் தொடங்கின. அவரது தம்பி ஜெயராஜ் இறுதிச் சடங்குகளைச் செய்தார். அதன் பிறகு பண்ணை வீட்டு வளாகத்தில் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் நடைபெற்றது.
எல்லோரையும் ஈர்த்து வந்த அந்தக் காந்தக் குரல் ஓய்வெடுத்துக் கொண்டது.. மீண்டும் நம் பாசத்துக்குரிய பாரதிராஜா எப்போது வருவார் என்ற ஏக்கத்துடன் மக்கள் கண்ணீருடன் அவருக்கு விடை கொடுத்து விட்டு சோகத்துடன் திரும்பினர்.