பாரதிராஜா நலமாக உள்ளார்... அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை

Su.tha Arivalagan
Jan 05, 2026,04:47 PM IST

சென்னை : உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டைரக்டர் பாரதிராஜா நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


உடல் நலக்குறைவு மற்றும் வயது முதிர்வின் காரணமாக டைரக்டர் பாரதிராஜா கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. பலரும் பாரதிராஜாவின் போட்டோக்களை வெளியிட்டு, இரங்கல் செய்தியும் பதிவிட்டு வந்தனர். பிறகு அவரது உயிருடன் இருப்பதாக பிரபலங்கள் பலரும் உறுதி செய்ததை அடுத்து, பலரும் தங்களின் சமூக வலைதள பதிவுகளை அகற்றினார்கள்.




பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து தவறான தகவல்கள், வதந்திகளை பரப்பப்பட்டு வரும் நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் இன்று பாரதிராஜா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அவரை நலம் விசாரித்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த டைரக்டர் சங்க நிர்வாகிகள், பாரதிராஜா மீது உண்மையாக மதிப்பு, மரியாதை இருந்தால் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள். இது போன்ற வதந்திகளை யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.


இந்நிலையில் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாரதிராஜா கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உறுப்பு குறைபாடுகளுக்கு அவருக்கு அனைத்து பொருத்தமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழுவால் அவர் தொடர்ந்து கூர்ந்து கவனிக்கப்படுகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.