அதிமுகவில் அடுத்த பிளவு: அடுத்தடுத்து சபாநாயகரை சந்திக்கும் எடப்பாடி, வேலுமணி குழுக்கள்
சென்னை: தமிழக அரசியலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் ஒரு பெரும் உட்கட்சிப் பூசலைச் சந்தித்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கட்சியில் ஏற்பட்டுள்ள தொடர் தோல்விகள் மற்றும் தலைமை குறித்த அதிருப்தி காரணமாக, தற்போது கட்சி அதிகாரப்பூர்வமாக இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளதாகத் தெரிகிறது.
வேலுமணி தலைமையில் புதிய அணி:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தங்களது நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தற்காலிக சபாநாயகரைச் சந்தித்த இந்த அதிருப்தி குழுவினர், "அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்ற கடிதத்தை அளித்தனர்.
மொத்தம் உள்ள 47 அதிமுக எம்.எல்.ஏ-க்களில் 30 பேர் தங்கள் பக்கம் இருப்பதாக வேலுமணி தரப்பு உரிமை கொண்டாடுகிறது. இதனால் அதிமுக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் பலம் வெகுவாகக் குறைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தலைமையின் பதில் என்ன?
இந்தக் குழப்பங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, கட்சியின் விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. "கட்சி ஒற்றுமையாக உள்ளது, ஒரு சிலர் சுயநலத்திற்காகச் செயல்படுகிறார்கள்" என்று ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இருப்பினும், வேலுமணி தரப்பினர் முன்வைக்கும் "பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்" மற்றும் "தோல்விகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்" என்ற கோரிக்கைகள் தலைமைக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளன. அதோடு அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில், இபிஎஸ் தான் எப்போதும் தங்களின் தலைவர் என பதிவிட்டு, எஸ்.பி.வேலுமணி தரப்பிற்கு பதிலளித்துள்ளது.
தவெகவுக்கு ஆதரவு:
இந்த மோதலின் உச்சகட்டமாக, எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிருப்தி குழுவினர், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி திமுக-வுடன் மறைமுகத் தொடர்பில் இருப்பதாக சி.வி.சண்முகம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக-வை மீட்டெடுக்கவும், கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுமே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டசபை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து எஸ்.பி.,வேலுமணி தரப்பினர் ஆதரவு எம்எல்ஏ.,க்களின் கடிதத்தை அளித்துள்ள நிலையில், அவர்களை தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் சபாநாயகரை சந்தித்து தனக்கு தான் பெரும்பான்மை எம்எல்ஏ.,க்களின் ஆதரவு உள்ளது என்ற ஆதரவு கடிதத்தை அளித்துள்ளார். இதனால் சட்டமன்றக்குழு அதிமுக தலைவர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
அரசியல் முக்கியத்துவம் :
இந்த பிளவு அதிமுக-வின் எதிர்காலத்தைப் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது. முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து சென்ற நிலையில், தற்போது கட்சியின் தூண்களாகக் கருதப்பட்ட எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை விட்டு விலகியுள்ளது, அதிமுக-வில் 'ஈபிஎஸ் சகாப்தம்' முடிவுக்கு வருகிறதா என்ற விவாதத்தைத் தூண்டியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இனி யார் உண்மையான அதிமுக? எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து யாருக்கு? போன்ற சட்டச் சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளதால், தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.