பிக்பாஸ் தமிழ் 9.. அடுத்த சீசனைக் கண்டுகளிக்க ரெடியா மக்களே.. இன்று முக்கிய அறிவிப்பு

Su.tha Arivalagan
Sep 01, 2025,04:47 PM IST

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 குறித்த முக்கிய அறிவிப்புக்களை விஜய் டிவி இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


விஜய் டிவி.,யின் மிக பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். பிக்பாஸின் முதல் 8 சீசன்கள் நிறைவடைந்து விட்டது. இந்நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதற்கு பிறகு அவர் முழுமையாக அரசியலில் களமிறங்கியதாலும், அடுத்தடுத்த படங்களில் கமிட்டானதாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். 


இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதற்கு ரசிகர்களிடம் ஆதரவு அதிகரித்து காணப்பட்டது. ஆரம்பத்தில் ஜூன்- ஜூலை மாதங்களில் துவங்கப்பட்டு 100 நாட்கள் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, கொரோனாவிற்கு பிறகு சற்று தாமதமாகவே துவங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பிக்பாஸ் சீசன் 9 எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாக விஜய் டிவி அறிவித்துள்ளது.




இன்று மாலை இந்த சீசனுக்கான லோகோ, புதிய விதிமுறைகள் பற்றிய க்ளூ போன்ற விபரங்கள், புரோமோ ஆகியவை வெளியிடப்படலாம் என்று சொல்லப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 9 துவங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க போகிறாராம். வழக்கம் போல் அவருக்கு இந்த முறையும் பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.


பிக்பாஸ் சீசன் 9 ல் சீரியல் நடிகர் சித்து சித், விஜே பப்பு, மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா, சோஷியல் மீடியா பிரபலம் அரோரா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 9 துவங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.