பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

Su.tha Arivalagan
Sep 09, 2025,06:53 PM IST

பாட்னா: பீகாரில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, சீமாஞ்சல் பகுதி மிக முக்கியமானதாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  குறிப்பாக இந்த பிராந்தியத்தில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி என்ன செய்யப் போகிறது என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த பிராந்தியத்தில் நான்கு மாவட்டங்களும், 24 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. மேலும், மாநிலத்தின் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 17% பேர் இங்கு வசிப்பதால், சீமாஞ்சல் தேர்தல் அனைவராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் இந்தப் பிராந்தியத்தில் அசாதுதீன் ஓவைசியின் கட்சி பெருளவில் வாக்குகளைப் பிரித்தது. இது காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிகளுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தி விட்டது.




சீமாஞ்சல் பகுதியில் கடந்த தேர்தலில் ஓவைசியின் கட்சி 5 தொகுதிகளில் வென்றது. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் இதில் நான்கு பேர் ராஷ்டிரிய ஜனதாதளத்திற்குத் தாவி விட்டனர் என்பது தனிக் கதையாகும்.


இந்த பிராந்தியத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் வக்ஃப் சட்டம் போன்ற விவகாரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதைத் தாண்டி ஓவைசி எப்படி செயல்படப் போகிறார்.. அவரது தேர்தல் உத்தியால் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதே பேசு பொருளாக உள்ளது.


சீமாஞ்சல் பிராந்தியத்தில் அராலியா, கதிஹார், கிசன்கஞ்ச், மற்றும் பூர்னியா ஆகிய நான்கு மாவட்டங்கள் உள்ளன. கிசன்கஞ்ச் மாவட்டத்தில் 68% முஸ்லிம்கள் வாழ்கின்றனர். கதிஹாரில் 44% முஸ்லிம்கள் உள்ளனர். அராலியாவில் 43% முஸ்லிம்கள் உள்ளனர்.

பூர்னியாவில் 38% முஸ்லிம்கள் உள்ளனர். இந்த நான்கு மாவட்டங்களிலும் மொத்தம் 24 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. சீமாஞ்சல் பகுதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.


2020ஆம் ஆண்டுத் தேர்தலில், சீமாஞ்சலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களை வென்றது. அதாவது 12 இடங்களை வென்றது. இதில் பா.ஜ.கவுக்கு 8, ஐக்கிய ஜனதாதளத்திற்கு 4 இடங்கள் கிடைத்தன. மறுபக்கம் காங்கிரஸ் கட்சி 5 இடங்களைப் பிடித்தது. அது தனித்துப் போட்டியிட்டது.


ஆர்.ஜே.டி மற்றும் சி.பி.ஐ.எம்.எல் கட்சிகளுக்கு தலா 1 இடம் இங்கு கிடைத்தது. ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி சுளையாக 5 இடங்களை வென்றது. இவர்கள் மட்டும் தனித்துப் போட்டியிடாமல் காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்திருந்தால் நிலைமையே தலைகீழாக மாறிப் போயிருக்கும்.


2020 சட்டசபைத் தேர்தலில், பெரும்பான்மை முஸ்லிம்கள் வசிக்கும் கிசன்கஞ்ச் மாவட்டத்தில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 


தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஒவைசி இந்த முறை எப்படி செயல்படப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் தனித்துப் போட்டியிட்டு மறைமுகமாக பாஜகவுக்கு உதவுகிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. ஆனால் ஓவைசி இதற்குத் தரும் விளக்கம் என்னவென்றால்  தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியை நாங்கள் எதிர்க்கிறோம். எங்களது மக்களுக்கான பிரதிநிதித்துவதை நான் தருகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கிறார். 


எதிர்க்கட்சி கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நீங்கள் உங்கள் தலையை குனிந்து, அவர்களுக்குப் பின்னால் அடிமைகளாக நடக்க வேண்டும் என்று மட்டுமே அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் அவர் காட்டமாக கூறியுள்ளார். இதனால் இந்த முறையும் ஓவைசி எதிர்க்கட்சிகளின் வாய்ப்புகளைப் பதம் பார்க்கப் போகிறார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.