பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
பாட்னா: பீகாரில் எதிர்க்கட்சிகளின் மகாபந்தன் கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்டது. இந்த நிலையில் இந்தியா கூட்டணியிலும் பேச்சுவார்த்தைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. கூடவே மோதலும் இருந்து வருகிறது. காங்கிரஸ் கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய விரும்பாமல், இந்த முறை கூட்டணியை வலுவாக கட்டமைப்பதில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஆளுக்கு எத்தனை என்பதில் பிரச்சினை இல்லையாம். ஆனால் எந்தெந்த தொகுதிகள் என்பதில்தான் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. பச்ச்வாரா, நர்கட்டியாகஞ்ச், கஹல்கான், பைசி, பகதூர்ஹஞ்ச், ரானிகஞ்ச் மற்றும் சஹார்சா போன்ற பல தொகுதிகள் வெற்றி பெறக்கூடியவையாகக் கருதப்படுகின்றன. காங்கிரஸ் இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. மறுபுறம், ராஷ்டிரிய ஜனதாதளம் 135 தொகுதிகளில் போட்டியிட இலக்கு வைத்து, பெரிய பங்கைப் பெற விரும்புகிறது.
மறுபக்கம் சிறிய கூட்டணிக் கட்சிகள் அழுத்தத்தை அதிகரித்துள்ளன. VIP கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி பிராந்திய கட்சிகளுக்கு 18-20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட முடிவில் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. முகேஷ் சஹானி 50 தொகுதிகளையும், கூட்டணி வெற்றி பெற்றால் துணை முதலமைச்சர் பதவியையும் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடதுசாரிக் கட்சிகளும் வேறு உள்ளன. CPI(ML) முதலில் 40 தொகுதிகளைக் கேட்டது, ஆனால் 30 ஆகக் குறைத்துள்ளது. ஆனால் இதையும் கூட ஆர்ஜேடி கட்சி ஏற்கவில்லை.