பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: பீகார் தேர்தல் அனைவருக்குமான பாடம். இந்த தேர்தல் முடிவு, தேர்தல் ஆணையத்தின் தவறான, பொறுப்பற்ற செயல்களை வெளிப்படுத்துகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளின் படி நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (JDU) கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி, நிதீஷ் குமாரின் அரசியல் திறமைக்கும், அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் சான்றாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
பீகார் தேர்தல் அனைவருக்குமான பாடம் ஆகும். அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர் நிதிஷ்குமாரின் தீர்க்கமான வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவருக்கு நல்வாழ்த்துக்கள். இளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் அயராத பிரச்சாரத்திற்காகவும் அவரை பாராட்டுகிறேன்.
நலத்திட்ட உதவிகள், சமூக மற்றும் சித்தாந்த கூட்டணிகள், தெளிவான அரசியல் செய்தி மற்றும் இறுதி வாக்கு எண்ணப்படும் வரை அர்ப்பணிப்புடன் கூடிய மேலாண்மை ஆகியவை தேர்தல் முடிவுகளை பிரதிபலிக்கின்றன. இந்தியா கூட்டணியின் தலைவர்கள், செய்தியைப் படித்து, வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள மூலோபாய ரீதியாக திட்டமிடும் திறன் கொண்ட அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் ஆவர். இந்தத் தேர்தல் முடிவு தேர்தல் ஆணையத்தின் தவறுகளையும், பொறுப்பற்ற செயல்களையும் மறைத்துவிடாது.
தேர்தல் ஆணையத்தின் நற்பெயர் தாழ்ந்த நிலையில் உள்ளது. இந்நாட்டு மக்கள் வலிமையான, நடுநிலையான தேர்தல் ஆணையத்தை எதிர்பார்க்கின்றனர்; தோற்றவர்களிடமும் நம்பிக்கை ஊட்டும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.