Nitish Kumar: பாஜக.,வேலையே இது தான்...நான் அப்பவே சொன்னேன்...தேஜஸ்வி ஆதங்கம்
பாட்னா: இந்திய அரசியலில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத மாநிலமான பீகாரில், மீண்டும் ஒரு அரசியல் புயல் வீசத் தொடங்கியுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சூழலில், முன்னாள் துணை முதல்வரும், ஆர்.ஜே.டி (RJD) கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், பாஜக மற்றும் நிதிஷ்குமார் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், "கூட்டணி கட்சிகளை ஹைஜாக் செய்து அவற்றை அழிப்பதே பாஜகவின் வாடிக்கை" என்று நேரடியாகத் தாக்கினார். மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் (JDU) என்ன நேர்ந்ததோ, அதே கதிதான் விரைவில் அதிமுக (ADMK) போன்ற மற்ற மாநிலக் கட்சிகளுக்கும் நடக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். பாஜக.,வின் பிளான் இது தான் என நான் முன்பே எச்சரித்தேன்.
மேலும், ஓபிசி (OBC) சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை 'ரப்பர் ஸ்டாம்ப்' முதல்வராக அமர்த்திவிட்டு, பின்னணியில் இருந்து ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பானது பீகாரை ஆளத் துடிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். "ஆட்சியைப் பிடித்த பிறகு கூட்டணி கட்சிகளைத் திட்டமிட்டு சிதைப்பதே பாஜகவின் வேலை" என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
நீண்ட காலமாக பீகாரின் முதல்வராகப் பதவி வகித்து வந்த நிதிஷ்குமார், மார்ச் 2026-ல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தற்போது மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதால், பீகார் அரசியலில் ஒரு புதிய தலைமைக்கான இடமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
நிதிஷ்குமாரின் இந்த விலகல், பாஜக-ஜேடியூ கூட்டணியில் அதிகாரப் பங்கீடு குறித்த புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. ஜேடியூ கட்சியில் நிதிஷ்குமாருக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அவரது மகன் நிஷாந்த் குமார் அரசியலில் நுழையத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.