அத்தையுடன் தவறான உறவு.. இளைஞரை அடித்து உதைத்த உறவினர்கள்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்!

Su.tha Arivalagan
Jul 09, 2025,01:42 PM IST

பாட்னா: பீகார் மாநிலத்தில் தனது அத்தையுடன் தவறான உறவில் இருந்த இளைஞரை உறவினர்கள் கடுமையாக அடித்து உதைத்தனர். கடைசியில் அந்த அத்தையுடனேயே அந்த இளைஞருக்கு கல்யாணமும் செய்து வைத்து விட்டனர்.


சுபால் மாவட்டத்தில் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் ஜூலை 2 ஆம் தேதி நடந்துள்ளது. மித்லேஷ் குமார் முகியா என்ற அந்த இளைஞர் கடத்தப்பட்டு, பீம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீவ்சாப்பூர் வார்டு எண் 8-ல் உள்ள அவரது மாமா சிவசந்திர முகியாவிற்குச் சொந்தமான வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


சிவசந்திராவின் மனைவி ரீட்டா தேவியுடன் மித்லேஷுக்கு தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.  சிவச்சந்திரா மற்றும் ரீட்டா தேவி தம்பதிக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். சிவச்சந்திரா வீட்டுக்குக் கூட்டிச் செல்லப்பட்ட மித்லேஷை உறவினர்கள் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இரும்பும் கம்பிகளாலும் அவர் தாக்கப்பட்டார்.


வைரலான காணொளியில், மித்லேஷ் கம்பிகளால் தாக்கப்படுவது பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, ரீட்டாவும் சம்பவ இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு கிராம மக்களால் தாக்கப்பட்டார். பின்னர், மித்லேஷைக் கட்டாயப்படுத்தி ரீட்டாவின் நெற்றியில் குங்குமம் இட வைத்துள்ளனர். 


மித்லேஷின் தந்தை ராமச்சந்திரா இதுகுறித்துக் கூறுகையில், தனது மகனைத் தாக்கும்போது தான் தடுத்ததாகவும், அப்பொழுது தன்னையும், தனது மனைவியையும் அந்தக் கும்பல் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் தனது மகனுக்கு முதுகு, கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கிராம மக்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்த பின்னரே, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். காவல்துறையினர் வந்ததும், குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.


ராமச்சந்திரா அளித்த புகாரின்படி, ஜீவ்சாப்பூரைச் சேர்ந்த ராஜா குமார், விகாஸ் முகியா, சிவசந்திர முகியா, சூரஜ் முகியா, பிரதீப் தாக்கூர், சுரேஷ் முகியா மற்றும் பீம்பூர் காவல் நிலையத்தின் பெலகஞ்சைச் சேர்ந்த ராகுல் குமார், சஜன் சஹானி ஆகியோர் தனது மகனைத் தாக்கியவர்கள் என்று தெரிவித்துள்ளார்.


இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.