இமாலய வெற்றியை நோக்கி...தமிழக தேர்தல் களம் குறித்து அண்ணாமலை அதிரடி கணிப்பு
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தேர்தல் களம் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மிக முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான அலை வீசத் தொடங்கியுள்ளதாகவும், கூட்டணி பலத்துடன் இமாலய வெற்றியை நோக்கி நகர்வதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இருமுனைப் போட்டியாக மாறும் களம் :
தமிழகத் தேர்தல் களம் குறித்துப் பேசிய அண்ணாமலை, "தமிழகத்தில் தேர்தல் களம் தற்போது ஒரு தெளிவான இருமுனைப் போட்டியாக மாறிக் கொண்டிருக்கிறது. களத்தில் பல்வேறு கட்சிகள் இருந்தாலும், பிரதான போட்டி என்பது இரு முக்கிய அணிகளுக்கு இடையே தான் என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்," என்று குறிப்பிட்டார்.
ஆளும் கட்சிக்கு எதிரான அலை :
தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் மேலும் கூறுகையில், "திமுக தொண்டர்கள் களத்தில் மிகக் கடுமையாக வேலை செய்து வருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர்களுக்குச் சவாலாக ஆட்சிக்கு எதிரான அலை மிகப்பரிய அளவில் வீசிக் கொண்டிருக்கிறது. இந்த அலை ஆளும் தரப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்."
NDA கூட்டணியின் முன்னேற்றம் :
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்துப் பேசிய அவர், கூட்டணிக் கட்சிகள் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றி வருவதைச் சுட்டிக்காட்டினார். "அதிமுக தலைமையிலான NDA கூட்டணியினர் களத்தில் மிகக் கடுமையாகப் பணியாற்றி வருகின்றனர். ஒரு பெரிய அரசியல் மாற்றத்திற்கான அலை இப்போது தான் முழுமையாக உருவாகத் தொடங்கியுள்ளது. இது வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையும்,” என்றார்.
இமாலய வெற்றியை நோக்கிய பயணம் :
இறுதியாக, தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசுகையில், “இந்தக் கூட்டணி மற்றும் மக்களின் ஆதரவுடன் நாங்கள் இமாலய வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் ஒரு நிலையான மற்றும் மாற்றத்திற்கான ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள், அதனை NDA கூட்டணி நிச்சயம் வழங்கும், என அண்ணாமலை உறுதியாகத் தெரிவித்தார்.