பாஜக எச்.ராஜா எப்படி இருக்கிறார்? அடுத்தடுத்து நலம் விசாரிக்கும் தலைவர்கள்

Su.tha Arivalagan
Feb 02, 2026,05:52 PM IST

சென்னை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை தமிழக முதல்வர் உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் நேரில் சென்று அவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் நலம் விசாரித்து வருகிறார்கள். இதனால் எச்.ராஜாவின் உடல்நிலை எப்படி உள்ளது? அவருக்கு என்னாச்சு என பாஜக தொண்டர்கள் கேட்டு வருகிறார்கள்.


கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சியின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் எச்.ராஜா. அப்போது நெறியாளர்களின் கேள்விகளுக்கு ஆவேசமாக பதிலளித்துக் கொண்டிருந்தார் எச்.ராஜா. பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென அவர் மயக்கமடைந்து, அவர் அமர்ந்திருந்த சேரில் சரிந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் பதறி போனார்கள். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பாஜக முன்னாள் மாநில தலைவரும், மருத்துவருமான டாக்டர். தமிழிசை செளந்தரராஜன் மேடைக்கு ஓடி வந்து, எச்.ராஜாவுக்கு முதலுதவி அளித்துள்ளார்.




பிறகு அங்கிருந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட எச்.ராஜா, முதலுதவிக்கு பிறகு, சென்னை க்ரீன்வேல்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஐசியூ.,வில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எச்.ராஜாவின் உடல் நிலை குறித்து இரண்டு நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், எச்.ராஜாவின் உடலில் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் குறைந்ததால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் மருத்துவமனைக்கு சென்று எச்.ராஜாவின் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, இன்று தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா விரைவில் குணமடைய நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துச் சென்று வேண்டிக் கொண்டார்.


எச்.ராஜாவுக்கு என்ன ஆச்சு? இரண்டு நாட்களாக மருத்துவ அறிக்கை கூட வரவில்லையே என பாஜக தொண்டர்கள் கேட்டு வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் பாஜக.,நிர்வாகிகள் சென்று சந்தித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் நிம்மதி அடைந்த தொண்டர்கள் அவர் விரைவில் குணமடைந்து, நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து, வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.