Nainar Nagendran: ஆளுநர் அர்லேகரை திடீரென சந்தித்த பாஜக நிர்வாகிகள்.. இது தான் விஷயமா?

Su.tha Arivalagan
Jul 04, 2026,12:43 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தற்போதைய சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்து முறையிடுவதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று ஆளுநரைச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று நேரில் சந்தித்துப் பேசினர். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் கட்சியின் முக்கிய மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் பலரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.


இந்த சந்திப்பு குறித்து பின்னர் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தவெகவினரே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து ஆளுநரிடம் புகார் கூறினோம்.




அமைச்சர் விஸ்வநாதன் சிறுமிகளிடம் நடந்து கொண்டது குறித்தும் புகார் கொடுத்துள்ளோம். அமைச்சர் ஒருவர் போதைப் பொருள் பயன்படுத்தியதாக சர்ச்சை உள்ளது. அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அதைப் பயன்படுத்தியதாக கூறுகிறார்கள். அப்படி இருந்தாலும் அது குற்றச் செயல்தான்.


ஆளுநர் மதுரை வைகை ஆற்றைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று கூறியதில் என்ன தவறு உள்ளது. அக்கறையில்தானே அதைக் கூறியுள்ளார். அரசுப் பணிகளில் ஆய்வு நடத்தவும் ஆளுநருக்கு உரிமை உள்ளது. இந்த தவெக அரசு அமைய பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைக் கூறியவரே ஆளுநர்தானே.


இந்த தவெக அரசு குதிரை பேரத்தில்தான் அமைந்தது. அமமுக எம்எல்ஏவைக் கடத்திச் சென்று கையெழுத்து வாங்கினரே என்றார் நயினார் நாகேந்திரன்.