திமுக.,வுக்கு பாஜக., வைக்கும் "செக்"...நயினார் எழுதிய கடிதத்திற்கு பின்னால் இவ்வளவு அரசியலா?
சென்னை : சமீபத்தில் திருத்தணியில் வட மாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். இது சாதாரண கடிதம் கிடையாது. திமுக.,வுக்கு பாஜக வைத்துள்ள செக் என்பது நன்கு கவனித்து பார்த்தால் தெரியும்.
நயினார் நாகேந்திரன், அமித்ஷாவிற்கு கடிதம் எழுதிய கடிதத்தில், "தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. போதை பொருள் கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது. அதனால் மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக இதில் தலையிட வேண்டும்" என கேட்டுள்ளார். மேலோட்டமாக பார்த்தால், அரசியல் ரீதியாக ஆளும் கட்சி அரசை, அரசியல் கட்சி தலைவர் ஒருவர் குறை கூறி, குற்றம்சாட்டி எழுதி உள்ள கடிதமாக தான் தெரியும். ஆனால் இதில் சமீப காலமாக தமிழகத்தில் நடைபெற்ற பல குற்றச்சம்பவங்களையும் தொடர்பு படுத்தி பார்த்து, மத்திய அரசு தலையிட வேண்டும் என கேட்டுள்ளதில் தான் விஷயமே உள்ளது.
ஒரு மாநிலத்தின் வேறு எந்த ஒரு விவகாரத்திலும் மத்திய அரசு நேரடியாக தலையிட முடியாது.அது மாநில சுயாட்சி, உரிமைகளை பறிப்பதாகி விடும். ஆனால் சட்ட ஒழுங்கு விவகாரங்களை காரணமாக வைத்து மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசின் விவகாரங்களில் நேரடியாக தலையிட முடியும். சட்ட ஒழுங்கை பாதிக்கும் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடப்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதையே காரணம் காட்டி, மத்திய அரசால் ஒரு மாநிலத்தில் ஆளும் அரசை கலைக்கவும் முடியும்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நயினார் நாகேந்திரன் எழுதிய கடிதத்தை அடிப்படையாக வைத்து, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டு போய் உள்ளது. திமுக அரசில் போதை கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது என்பதை முன் வைத்து எதிர்க்கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்தால் அது திமுக.,விற்கு மிகப் பெரிய நெருக்கடியாக அமையும். அதே போல், நயினாரின் கடிதத்தை வைத்து மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு தமிழகத்தில் சட்ட ஒழுங்கை காப்பதற்காக திமுக அரசை கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தால் அது திமுக.,வை அதள பாதாளத்தில் தள்ளி விடும். அதோடு முன்கூட்டியே தேர்தல் வருவதற்கும் வாய்ப்புள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணி பலம் இல்லாமல் உள்ளது. அதனால் அவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என திமுக.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் அதீத நம்பிக்கையுடன் இருக்கும் இந்த சமயத்தில், கூட்டணி பலம் இல்லை என்றாலும் திமுக.,வை தேர்தலுக்கு முன்பே வீழ்த்துவதற்கான வேலைகளை பாஜக சத்தமில்லாமல் செய்து வருகிறது.