டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி

Su.tha Arivalagan
Jul 27, 2026,05:08 PM IST

சென்னை: தமிழகத்தில் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் குறித்த விவரங்கள் இதுவரை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என்றும், தமிழக அரசு மக்கள் மத்தியில் நற்பெயர் வாங்குவதற்காகவே இந்த வதந்தியை கிளப்பியுள்ளதா என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளைக் குறைப்பதாகக் கூறி, 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உண்மையில் இந்த கடைகள் மூடப்பட்டனவா அல்லது வெறும் காகித அளவிலான விளம்பரம் தானா என்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


RTI தகவல்களும் மூடி மறைக்கப்படும் உண்மைகளும்:




தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முகவரிகள் கோரப்பட்ட போதிலும், இதுவரை அது தொடர்பான எவ்விதத் தெளிவான தகவல்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும், மூடப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கடைகள் உண்மையில் முற்றிலுமாக மூடப்பட்டுவிட்டனவா அல்லது பொதுமக்கள் பார்வைக்குத் தெரியாதவாறு வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனவா என்ற கேள்விகளுக்கும் அரசிடமிருந்து எவ்விதப் பதிலும் இல்லை.


விளம்பர அரசியலா?

வெறும் "வெட்டி வசனமும், வீண் விளம்பரமும்..." மட்டுமே அரசின் செயல்பாடுகளாக உள்ளதாக விமர்சித்துள்ள அவர், ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த புதிதில் ஏதேனும் ஒரு திட்டத்தைச் செய்து முடித்தது போலக் காட்டி மக்கள் மத்தியில் நற்பெயர் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ‘தவெக’ (தமிழக வெற்றிக் கழகம்) அரசே இந்த வதந்தியைக் கிளப்பிவிட்டதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.


டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் குற்றம்சாட்டியுள்ள நயினார் நாகேந்திரன், உண்மையிலேயே 717 கடைகளும் மூடப்பட்டிருந்தால் அதற்கான முழுமையான முகவரிப் பட்டியலையும், அது தொடர்பான RTI பதில்களையும் அரசு உடனடியாக மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.