ரஜினிகாந்திடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் குறித்து தவெக.,வின் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்களுக்குத் தமிழக பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்ச்சையின் பின்னணி :
சமீபகாலமாக அரசியல் மற்றும் சமூக மேடைகளில் ஆதவ் அர்ஜுனா தெரிவித்து வரும் சில கருத்துக்கள் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அந்த வகையில், திரையுலகின் மூத்த நடிகராகவும், உச்ச நடிகராக திகழும் நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சைக்குள்ளானது. சமீபத்தில் தவெக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்த கொண்டு பேசிய ஆதவ் அர்ஜூனா, அரசியலுக்கு வர நினைத்த ரஜினியை பாஜக.,தான் மிரட்டி தடுத்து விட்டதாக தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரனின் கண்டனம் :
இது குறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக, தமிழக மக்களின் பேரன்பிற்குச் சொந்தக்காரரான ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியதை அக்கட்சியின் தலைவர் (விஜய்) கண்டிப்பதோடு, இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுரையையும் வழங்க வேண்டும்." மேலும், ரஜினிகாந்தின் கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதற்காக, ஆதவ் அர்ஜுனா உடனடியாக ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அரசியல் களத்தில் நிலவும் பரபரப்பு :
திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இருக்கும் செல்வாக்கையும், மக்கள் அவர் மீது வைத்துள்ள அன்பையும் சுட்டிக்காட்டியுள்ள நயினார் நாகேந்திரன், அரசியல் லாபத்திற்காகத் தலைவர்களைத் தரக்குறைவாக விமர்சிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்பதையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். தவெக கட்சியின் தலைமை, தனது கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் பேசும் போது கண்ணியத்தைக் கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும் என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.