பொறுப்பேற்றதும் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசிய பாஜக நிதின் நபின்
டில்லி: பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபின், திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இந்துக்களின் பாரம்பரியத்திற்கு எதிராகச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக.,வின் தேசிய தலைவர் தேர்தலில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அக்கட்சியின் நிதின் நபின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக.,வின் இளம் தேசிய தலைவரான இவர் இன்று அதிகாரப்பூர்வ தலைவராக அறிவிக்கப்பட்டு, முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். தேசிய தலைவராக பொறுப்பேற்ற உடனேயே முதல் விஷயமாக திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்து பேசி உள்ளார் நிதின் நபின்.
அவர் கூறுகையில், திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதிபதியையே பதவிநீக்கம் செய்ய (Impeachment) எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறார்கள். சட்டப்பூர்வமான நடைமுறைகளில் தலையிட்டு, தங்களுக்குச் சாதகமற்ற சூழல் உருவாகும் போது நீதிபதிகளுக்கே அழுத்தம் கொடுக்கும் போக்கை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்."எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்துக்களின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்திற்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் அவர்கள் உண்மைக்கு மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்," என்று நிதின் நபின் தெரிவித்தார்.
இந்துக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் பாஜக உறுதியாக இருக்கும் என்பதையும், எதிர்க்கட்சிகளின் இத்தகைய 'அச்சுறுத்தல் அரசியலை' மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அவர் தனது பேச்சின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரம் ஏற்கனவே சமூக வலைதளங்களிலும் அரசியல் தளங்களிலும் விவாதப் பொருளாக உள்ள நிலையில், நீதிபதி மீதான பதவிநீக்க முயற்சி குறித்த நிதின் நபினின் இந்தப் புகார், வரும் நாட்களில் மேலும் பல விவாதங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தமிழக சட்டசபை தேர்தலை பாஜக தலைமை எவ்வளவு முக்கியமானதாக கருதுகிறது என்பதற்கும் சிறந்த உதாரணமாக இது பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசுகையில், தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு தீபம் ஏற்றக் கூட உரிமையில்லாத நிலை உள்ளது. தமிழகத்தில் இந்துக்கள் பாதுகாப்பில்லாத நிலையில் இருக்கிறார்கள் என கூறி இருந்தார். இந்த சமயத்தில் அக்கட்சியின் புதிய தலைவரும் இதே போன்ற ஒரு கருத்தை கூறி உள்ளது தேசிய அளவில் முக்கியமான விஷயமாக பேசப்பட்டு வருகிறது.