மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழக்கும் மம்தா பானர்ஜி... அதிரடி காட்டிய பாஜக முன்னிலை!

Su.tha Arivalagan
May 04, 2026,12:42 PM IST

கொல்கத்தா: அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் நிறைவுற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.


மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் 294 இடங்களுக்கு இரண்டு  கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 294 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் முறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற 293 தொகுதிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.


வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இருந்து வருகிறது. இதனையடுத்து பபானிபூர் தொகுதியில் மம்தாவை பின்னுக்கு தள்ளி பாஜகவின் முதல்வர் வேட்பாளர் முன்னிலையில் இருந்து வருகிறார். மேற்கு வங்கத்தில் பெரும்பான்மைக்கு 148 இடங்கள் தேவைப்படும் நிலையில் தற்போதைய நிலவரப்படி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சி அமைத்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் தற்போது ஆட்சியைப் பறி கொடுக்கிறது.


கேரளா: 




கேரளாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 100 இடங்கள் முன்னிலையை நெருங்கி வரும் நிலையில், இடது முன்னணி 44 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 


வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், பாஜக தற்போது இரண்டு இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து காங்கிரஸ் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.


புதுச்சேரி:


புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரெங்கசாமி வெற்றி. முன்னாள் முதல்வரும் தற்போதைய காங்கிரஸ் எம்பியுமான வைத்திலிங்கத்தை வீழ்த்தியுள்ளார். இங்கு மீண்டும் என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியே தொடரவுள்ளது.


அசாம்:


அசாமில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. பல கருத்துக் கணிப்புகள் மீண்டும் பாஜகவே வெல்லும் என்று கூறியிருந்தன. அதற்கேற்ப அங்கு மீண்டும் பாஜகவே வெல்கிறது.