சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

Meenakshi
Jan 23, 2026,06:12 PM IST

சென்னை: சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுவதைப் போல, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றித் தலைவன் வருவதற்கு முன்னே வழக்கம் போல  அறிவாலய அரசின் வெற்றுப் புலம்பல் ஒலி தொடங்கி இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ஷாக்கைக் குறைங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!


சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுவதைப் போல, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றித் தலைவன் வருவதற்கு முன்னே வழக்கம் போல 

அறிவாலய அரசின் வெற்றுப் புலம்பல் ஒலி தொடங்கி இருக்கிறது!


தங்களது அத்தனைப் போலிக் குற்றச்சாட்டுகளுக்கும் இந்த ஒரு புகைப்படமே பதில்! அதைப் பார்த்த பின்பாவது புளித்தப்போன புரட்டுகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்!




நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக்கோரி தூய்மைப் பணியாளர்கள் போராடிய வேளையில், அவர்களைக் காணாது திரைப்படம் கண்டு களித்ததை யாராவது மறக்க முடியுமா? தினந்தினம் பெண்கள் காமக்கொடூரர்களின் கரங்களில் சிக்கித் தவிக்கும் வேளையில், "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என நாடகம் நடத்தி விளம்பரம் தேடியதை மறக்க முடியுமா? போதையின் பாதையில் இளைஞர்கள் சீரழியும் போது, போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதைவிட்டு, மேடையில் மட்டும் பாடம் எடுத்த கோரத்தை மறக்க முடியுமா? கொடுத்த வாக்குறுதியைப் பறக்கவிட்டு பகுதிநேர ஆசிரியர் திரு. கண்ணன் அவர்களின் உயிரைப் பறித்த கொடூரத்தை தான் மறக்க முடியுமா?


இப்படிப்பட்ட கொடுங்கோல் ஆட்சியை நடத்திவிட்டு, ஃபோட்டோஷூட்டுக்கு மட்டும் தலைகாட்டும் தங்களின் வெற்று திசைத்திருப்பு ஒப்பாரியைக் கண்டு மக்கள் மாறப்போவதில்லை! இன்னும் எவ்வளவு கதறினாலும் திமுக இனியொருமுறை அரியணை ஏறப்போவதில்லை!


ஒரு காலத்தில், தங்களுக்குப் பிடிக்காதவர்கள் குறித்து, பொதுக்கழிவறைகளில் கரித்துண்டால் எழுதி அற்ப சந்தோஷப்படும் மோசமான பழக்கத்தை, AI காலத்திலும் தொடராதீர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே. இனியாவது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.