மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை: நயினார் நாகேந்திரன்

Meenakshi
Jan 27, 2026,05:47 PM IST

சென்னை: மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், இன்றே தேர்தல் வந்திடாதா" என்று மக்கள் ஏங்குமாறு சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கு!


சென்னையில் அடையாறு அருகே சாக்கு மூட்டையில் வெட்டுக் காயங்களுடன் ரத்தம் வழிய வடமாநில இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.




மாநிலத் தலைநகரிலேயே சிறிதும் பயமின்றி கொன்றுவிட்டு, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், பட்டப்பகலில் சாக்கு மூட்டையில் சடலத்தை வீசிச் செல்லும் அளவிற்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகிறது.


கொடூரக் குற்றங்களை என்றோ ஒருநாள் கேள்விப்படும் காலம் மலையேறி, எங்கு காணினும் கொலை, கற்பழிப்பு, கொள்ளை, கஞ்சா போதைத் தாக்குதல் என நொடிக்கு ஒரு வன்முறை செய்தி செவிகளில் எட்டிக் கொண்டே இருக்கின்றன. இதே ரீதியில் சென்றால், தமிழகத்தில் வாழ்வதே நரகமாகிவிடும் போல!


காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி, திக்கெட்டும் கஞ்சா போதைமயமாக்கி, குற்றவாளிகளைப் பெருக்கெடுக்கச் செய்து தங்கள் உயிரோடு விளையாடும் அலட்சிய 

அறிவாலய அரசை ஒழித்துக் கட்டினால் மட்டும் தான் நிம்மதி எனத் தமிழக மக்கள் அனைவரும் தேர்தலை எதிர்நோக்கிக் காத்து வருகின்றனர். எனவே, மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை என்று தெரிவித்துள்ளார்.