திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!
சென்னை: திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள தர்காவில் அஸ்ரத் ஆக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் அஜீஸ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று புனித நீர் தெளிப்பதற்காகக் குழந்தையுடன் தர்காவிற்கு வந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, கத்தியால் குத்தி தாக்கியதாக வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடும் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கும் பாதிக்கப்பட்ட அப்பெண் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
படிக்கும் பள்ளி முதல் புனிதமான பள்ளிவாசல் வரை பாலியல் கரங்கள் பெண்களைத் தொடர்கிறது என்றால் அறிவாலயம் அரசையும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டம் ஒழுங்கையும் குற்றவாளிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று தானே அர்த்தம்? அதிலும் அப்துல் அஜீஸ் மீது ஏற்கனவே பல பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகச் செய்திகள் உலா வரும் நிலையில், அவர் தர்காவின் தலைவராக எப்படி நியமிக்கப்பட்டார்?
மேலும், விருதுநகர் மாவட்டத்தையே பதற்றத்தில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவத்தைப் பற்றி திமுகவின் போலி பெண் போராளிகளும், பிற தலைவர்களும் இதுவரை வாய் திறக்காதது ஏன்? இஸ்லாமிய மக்களின் ஓட்டு வங்கி அடி வாங்கிவிடும் என்ற அச்சமா? அல்லது வழக்கம்போல இந்தப் பாலியல் வழக்கிலும் உடன்பிறப்புகள் ஒளிந்துள்ளனரா?
சமூகநீதி, மத நல்லிணக்கம் குறித்தெல்லாம் பிறருக்கு வகுப்பெடுக்கும் திமுக அரசு, இந்த விவகாரத்தை எவ்வித சமரசமுமின்றி அணுக வேண்டும் எனவும், குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்வதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டுமெனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.