முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே... சொன்னீங்களே செஞ்சீங்களா ?: நயினார் நாகேந்திரன் கேள்வி!

Meenakshi
Aug 30, 2025,02:48 PM IST

சென்னை: அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?


தனது சொந்த வாரிசுகளின் வளர்ச்சியில் மட்டும் என்றும் அக்கறை காட்டும் அறிவாலயம், தமிழக வாரிசுகளை ஏமாற்றி வேலைவாய்ப்புகள் இல்லாமல் தவிக்கவிட்டு காற்றில் பறக்கவிட்ட தேர்தல் வாக்குறுதி தான் எண் 187.




தேர்தலுக்கு முன் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3,50,000 இளைஞர்கள் நியமிக்கப்படுவர் என்று முழங்கிவிட்டு, TNPSC தேர்வுகளை முறையாக நடத்தாதது, சுய விளம்பரக் கேள்விகளைக் கேட்பது, பாடத்திட்டத்தை மீறிய கேள்விகளைக் கேட்பது, நடத்திய தேர்வுகளுக்கான முடிவுகளை உடனடியாக வெளியிடாதது என கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றாது, காலிப் பணியிடங்களையும் நிரப்பாது வெற்று விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது திமுக அரசு.


இவ்வாறு தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்ததோடு அரசின் நிர்வாகத் திறனையும் பாதித்து, தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் சிதைத்த திமுக அரசு, வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க எண்ணுவது, என்றும் நிறைவேறாத கனவே! என்று தெரிவித்துள்ளார்.