ஒரே ஆண்டில் பாஜக வருமானம் 55.95% அதிகரிப்பு...ஏடிஆர் அதிர்ச்சி தகவல்

Su.tha Arivalagan
Mar 06, 2026,05:58 PM IST

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகளின் 2024-25 நிதியாண்டிற்கான வருமான விவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, தேசிய கட்சிகளின் மொத்த வருமானத்தில் சுமார் 85 சதவீதத்தை பாரதிய ஜனதா கட்சி (BJP) மட்டுமே பெற்று முதலிடத்தில் உள்ளது தெரிய வந்துள்ளது.


கடந்த 2024-25 நிதியாண்டில் பாஜக, காங்கிரஸ், சிபிஐ(எம்), ஆம் ஆத்மி, பிஎஸ்பி மற்றும் என்பிஇபி ஆகிய 6 தேசிய கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.7,960.09 கோடியாக உள்ளது. 


கட்சிகளின் வருமானப் பட்டியல்:




- பாஜகவின் வருமானம் ரூ.6,769.14 கோடி. இது தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த வருமானத்தில் 85.03 சதவீதமாகும்.

- காங்கிரஸ் ரூ.918.28 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது மொத்த வருமானத்தில் 11.53 சதவீதம் மட்டுமே.

- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.172.60 கோடி வருமானத்தைப் பதிவு செய்துள்ளது.

- ஆம் ஆத்மி கட்சி ரூ.39.28 கோடியும், பிஎஸ்பி ரூ.58.58 கோடியும் வருமானம் ஈட்டியுள்ளன.


வருமானம் அதிகரிப்பும் வீழ்ச்சியும்:


கடந்த 2023-24 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, பாஜகவின் வருமானம் 55.95 சதவீதம் (ரூ.2,428.67 கோடி) அதிகரித்துள்ளது. அதே சமயம், காங்கிரஸ் கட்சியின் வருமானம் 25.05 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் வருமானம் வியக்கத்தக்க வகையில் 73.20 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


செலவு விவரங்கள்:


பெறப்பட்ட வருமானத்தில் பாஜக சுமார் 55.76 சதவீதத்தை (ரூ.3,774.58 கோடி) செலவிட்டுள்ளது. இதில் தேர்தல் பிரச்சாரங்களுக்காக மட்டுமே ரூ.3,335.36 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி தனது வருமானத்தை விட 21.09 சதவீதம் கூடுதலாக, அதாவது ரூ.1,111.94 கோடியை செலவு செய்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நிதி ஆதாரம் எங்கிருந்து வருகிறது?


தேசிய கட்சிகளின் மொத்த வருமானத்தில் 85.08 சதவீதம் (ரூ.6,772.53 கோடி) நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகள் மூலம் கிடைத்துள்ளது. பாஜக தனது வருமானத்தில் 90.48 சதவீதத்தை நன்கொடைகள் மூலமே பெற்றுள்ளது. ஆனால், மாயாவதியின் பிஎஸ்பி கட்சி தனக்கு எந்தவித நன்கொடையும் வரவில்லை என்றும், இதர ஆதாரங்கள் மூலமே வருமானம் வந்ததாகவும் தெரிவித்துள்ளது.