சரயு நதிக்கரையில்.. ஜல சமாதி செய்யப்பட்ட.. ராமர் கோவில்.. தலைமை அர்ச்சகர் ஆச்சார்யாவின் உடல்
அயோத்தி: ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் சரயு நதி கரையில் ஜல சமாதி செய்யப்பட்டது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகராக இருந்தவர் ஆச்சாரியா சத்யேந்திர தாஸ். இவருக்கு வயது 87 . பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த ராமர் கோவிலில் அர்ச்சகராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அதேபோல் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சாஸ்திர அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினராகவும் இருந்து வந்தார்.
இவர் கடந்த சில நாட்களாகவே உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மூளையில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக பிப்ரவரி இரண்டாம் தேதி அயோத்தியில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை அறிவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனளிக்காமல் போகவே கடந்த 12ம் தேதி காலை 8 மணி அளவில் மறைந்தார். இன்று அவரது உடல் ஜல சமாதி செய்யப்பட்டது. அதாவது மறைந்த ராமர் கோயிலின் தலைமை பூசாரி ஆச்சாரியாவின் உடலில் கற்கள் கட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சரயு நதியில் வீசப்பட்டு ஜல சமாதி செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருகிறது.
முன்னதாக இவருடைய உடல் அயோத்தி நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இவரின் உடலுக்கு பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.