வெடிகுண்டு மிரட்டல்.. அதிகாலையிலேயே வந்த பரபரப்பு மெயில்.. உஷாரான போலீஸார்

Su.tha Arivalagan
Nov 19, 2025,10:36 AM IST

- அ. கோகிலா தேவி


சென்னை: சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று அதிகாலையில் வந்த இமெயில் தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.


இன்று (நவம்பர் 19, 2025) அதிகாலை சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மின்னஞ்சலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் தீவிர வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இருப்பினும், சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இது வழக்கமான புரளி என்று தெரியவந்தது.


இதுபோன்ற போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இப்படித்தான் கடந்த 12ம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அது வாரணாசியில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அதுவும் ஒரு புரளி என்று தெரியவந்தது.




இண்டிகோ விமான நிறுவனத்தின் குறைதீர்க்கும் மையத்திற்கு வந்த ஒரு மின்னஞ்சலில் டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம் ஆகிய 5 முக்கிய விமான நிலையங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சோதனைகள் பலப்படுத்தப்பட்டன.


கல்வி நிறுவனங்கள், பிரபலங்களின் வீடுகள் உள்ளிட்டவற்றுக்கும் அடுத்தடுத்து போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்த இவை அனுப்பப்படுவதால் மிரட்டல் விடுப்போரை பிடிப்பதும் பெரும் சிரமமாக உள்ளது.


(அ.கோகிலா தேவி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)