சென்னையில் ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை மைய அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக இந்தியா முழுவதிலும் வெடிகுண்டு மிரட்டல்கள் நடந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு அதிகளவில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து அனைவரையும் கதிகலங்க செய்து வருகின்றது. அதுமட்டுமின்றி சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் அது புரளி என்று தெரிய வந்தது.
இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள இரண்டு இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஜிஎஸ்டி அலுவலகத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும், வானிலை ஆய்வு மையத்திற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பெயரிலும் மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து இந்த இரு இடங்களிலும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு மோப்ப நாய் உதவியுடன் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர் குழுவும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.