சிடி ஸ்கேன் எடுக்கச் சென்ற 22 வயதுப் பெண்ணுக்கு.. திடீர் அலர்ஜி.. அடுத்து நடந்த விபரீதம்!

Su.tha Arivalagan
Aug 25, 2025,05:02 PM IST

ரியோ டூ சுல் (பிரேசில்): பிரேசில் நாட்டில் சிடி ஸ்கேன் எடுக்கச் சென்ற 22 வயதேயான இளம் பெண் வக்கீல் ஒருவர் அலர்ஜி தாக்கி மரணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரேசில் நாட்டின் ரியோ டூ சுல் (Rio do Sul) நகரிலுள்ள ஆல்டோ வேல் மண்டல மருத்துவமனையில் (Alto Vale Regional Hospital) சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் காண்ட்ராஸ்ட் ஏஜென்ட் (contrast agent) என்ற மருந்து ஒவ்வாமை காரணமாக, 22 வயதான இளம் வழக்கறிஞர் லெட்டிசியா பால் என்பவர் மரணமடைந்தார். 


ஆகஸ்ட் 20 அன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவருக்கு ஆஸ்துமா மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகள் இருந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து லெட்டிசியாவின் அத்தை சான்ட்ரா பால் கூறுகையில், சிறுநீரகக் கல் பிரச்சனை காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு லெட்டிசியா சென்றார். சி.டி. ஸ்கேன் பரிசோதனையின் போது மருந்து செலுத்திய சில நிமிடங்களில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.  அதைத் தொடர்ந்து அவர் மரணமடைந்தார் என்று கூறியுள்ளார்.




மருத்துவர்கள் இதை அனாஃபைலாக்டிக் ஷாக் (anaphylactic shock) என்று சொல்கிறார்கள். இது சிலருக்கு திடீரென ஏற்படும், கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை காரணமாக இப்படி ஏற்படுகிறது. மூச்சுக்குழாய் சுருங்குதல், மூச்சுத் திணறல், தொண்டை வீக்கம் மற்றும் இரத்த அழுத்தம் குறைதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். 


லெட்டிசியாவுக்கு உடனடியாக உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், ஒரு நாளுக்குள் அவர் உயிரிழந்தார். லெட்டிசியா பால், லோன்ட்ராஸ் நகரைச் சேர்ந்த சட்ட பட்டதாரி. சட்டத் துறையிலும், ரியல் எஸ்டேட் துறையிலும் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். 


இதுபோன்ற சம்பவங்கள், 5,000 முதல் 10,000 நோயாளிகளில் ஒருவருக்கு ஏற்படுமாம். அதேசமயம், ஸ்கேன்களில் பயன்படுத்தப்படும் காண்ட்ராஸ்ட் ஏஜென்ட்கள் பொதுவாக பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவைதான். அரிதாக இதுபோன்ற சம்பவங்கள் நேர்ந்து விடுவதாக டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.