லண்டனில் ஷாருக்கானுக்கு சிலை.. கூட யாரு இருக்காங்க பாருங்க..!
- சரளா ரம்பாபு
லண்டன்: இந்தியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூலை வாரிக் குவித்த, பலருடைய இதயங்களை கொள்ளை கொண்ட தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படத்திற்கு ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. சாதாரண அங்கீகாரம் கிடையாது.. சர்வதேச புகழ் கிடைத்துள்ளது. இந்தப் படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து லண்டனில் ஷாருக்கானுக்கும், கஜோலுக்கும் அங்குள்ள லெஸ்டர் ஸ்கொயரில் சிலை வைத்துள்ளனர்.
சாதாரண சிலை கிடையாதுங்க.. உலோகத்தால் ஆன சிலை. இந்தியாவுக்கு வெளியே, ஒரு இந்திப் படத்துக்கு வைக்கப்படும் முதல் உலோக சிலை இதுதான். இந்தியாவிலும் கூட இப்படிப்பட்ட பெருமை எந்தப் படத்துக்கும் கிடைத்ததாகத் தெரியவில்லை. வெண்கலத்தால் ஆன ஷாருக்கான்- கஜோல் சிலை பலரையும் கவர்ந்துள்ளது.
தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே 1995 இல் வெளியான புகழ்பெற்ற இந்தி திரைப்படம் ஆகும். ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் கஜோல் ஷாருக்கான் நடிப்பில் வெளியானது. நீண்ட நாட்கள் அதாவது 1009 வாரங்கள் ஓடி சாதனையைப் படைத்த திரைப்படம் இது.
அமிதாப் பச்சனின் ஷோலே, கமல்ஹாசனின் ஏக் துஜே கேலியே போன்ற ஹிந்தி பிளாக்பஸ்டர் படங்களை அசால்டாக சைடு வாங்கிய இந்தி படம் இது. கார்த்தி தமன்னாவின் பையா தமிழ் படம் கார் பயணத்தை போன்று இது ஒரு ரயில் பயணத்தை கதையில் முக்கியமாகக் கொண்டது.
படத்தில் ஷாருக்கான் ஐரோப்பிய வாழ்க்கை முறையை விரும்பும் அல்ட்ரா மாடர்ன் இளைஞர் ஆவார். கஜோல் பாரம்பரியான பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவராக இதில் நடித்திருப்பார். படத்தில் நடித்த அத்தனை பேருமே ரசிகர்களைக் கவர்ந்திழுத்தார்கள். இந்தப் படத்தில் ஷாருக்கான் அணிந்திருந்த லெதர் ஜாக்கெட்டை வாங்கிய இடம் அமெரிக்காவின் கலிபோர்னியா. இந்த படத்தின் தயாரிப்பாளரான யஷ் சோப்ரா தனக்காக 400 டாலர்கள் கொடுத்து வாங்கிய ஜாக்கெட் அதுவாகும்.
இப்படத்தின் தலைப்பை வைத்தது ஷாருக்கான் அப்பாவாக நடித்த அனுபம்கரின் மனைவி கிரண் கர் ஆவார். இவர் கதையை கேட்டு விட்டு "பையன் வந்து பெண்ணை கூட்டிப் போவான் "என்று சொல்ல அதையே இயக்குனர் ஆதித்யா கதையின் டைட்டிலாக வைத்தாராம். படம் உருவானது எப்படி என்ற ஆவணப்படம் வெளியானதும் கூட முதலில் இப்படத்திற்கு தான்.
திரைப்படங்களுக்கும் திரை உலக பிரபலங்களுக்கும் மெழுகு சிலை அமைப்பது வழக்கமாக உள்ளதுதான். ஆனால் உலோக சிலை இதுதான் முதல் முறையாகும். பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு வந்திய தேவன் சிலை சென்னையில் வைக்கப்பட்டது. சிவாஜி கணேசன் அவர்களின் சிலையும் இதுபோல வைக்கப்பட்டு மரியாதை காரணமாக மற்றொரு இடத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டது. சன்னி லியோன் சிலை டெல்லி Madame Tussauds அருங்காட்சியத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டது அவரது உலகளாவிய பிரபலத்தை பிரதிபலிக்கிறது.
(சரளா ராம்பாபு, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)