மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?

Su.tha Arivalagan
Jan 31, 2026,03:06 PM IST
டில்லி : மத்திய பட்ஜெட் 2026-ஐ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதியான நாளை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி குறைக்கப்படுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

தற்போது இந்தியாவில் 10 கிராம் தங்கம் விலை ரூ.1.6 லட்சம் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 5,000 டாலரை நெருங்கியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி. 'கிரீன்லாந்து தொடர்பான தகராறு' போன்ற காரணங்களால் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றால் இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை எட்டி உள்ளது. தங்கத்திற்கு போட்டியாக வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.



உயர்ந்து வரும் விலையால் சாமானிய மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நகைத் துறை அமைப்புகள் (GJC மற்றும் பிறர்) அரசாங்கத்திடம் சில முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

- ஜிஎஸ்டி (GST) குறைப்பு: தற்போது நகை விற்பனைக்கு 3% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இதை 1.25% அல்லது 1.5% ஆகக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களின் சுமையைக் குறைக்கும்.

- இறக்குமதி வரி (Import Duty): தற்போதுள்ள 6% இறக்குமதி வரியை 4% அல்லது அதற்குக் குறைவாக குறைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இது கடத்தல் சம்பவங்களைக் குறைக்க உதவும்.

- சாவரின் கோல்ட் பாண்ட் (SGB): கடந்த 2024-இல் நிறுத்தப்பட்ட 'மக்களுக்கு வட்டி மற்றும் வரிச் சலுகை தரும்' தங்கப் பத்திரத் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

வரிகள் குறைக்கப்பட்டால், உள்நாட்டுச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. திருமணக் காலங்களில் நகை வாங்கும் மக்களுக்கு இது பெரிய நிம்மதியைத் தரும். சில்லறை வணிகம் மற்றும் உற்பத்தித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். பட்ஜெட்டில் வரி சலுகைகள் அளிக்கப்பட்டால் விலையில் மாற்றம் ஏற்படும். இருப்பினும், சர்வதேச சந்தை நிலவரங்களே நீண்ட கால அடிப்படையில் விலையைத் தீர்மானிக்கும். எனவே, பிப்ரவரி 1-ஆம் தேதி அறிவிப்புகள் வரும் வரை பெரிய முதலீடுகளைச் செய்யப் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.