நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

Meenakshi
Jan 28, 2026,05:49 PM IST

சென்னை: தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (ஜனவரி 28, 2026) ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கம் காரணமாக, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. மேலும், வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள் உலகச் சந்தையில் ஒருவிதப் பதற்றத்தை உருவாக்கியுள்ளதே இந்தத் திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.




அது மட்டுமின்றி பங்குச்சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையால், பலரும் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த மாதத் தொடக்கத்தில் (ஜனவரி 5) சவரன் ஒரு லட்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது ஒரு லட்சத்து 22 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது என்பது 'எட்டாக்கனி'யாக மாறி உள்ளது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் சவரனுகு்கு ரூ.2,960 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.2,240 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.15,610க்கும், ஒரு சவரன் ரூ.1,24,880க்கும் விற்பனையாகி வருகிறது.