புதுச்சேரியில்.. இன்று முதல் பேருந்து கட்டண உயர்வு.. பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பு ரேட் தெரிஞ்சுக்கங்க!

Manjula Devi
Dec 24, 2024,05:10 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்திய பேருந்து கட்டணத்தை இன்று அமலுக்கு கொண்டுவந்துள்ளது புதுச்சேரி அரசு.


புதுச்சேரியில் கடந்த 2018ம் ஆண்டு அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு இதுவரை ஆறு ஆண்டுகள் ஆகி உள்ளன. இந்த நிலையில் தற்போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இதுதொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.


இந்த அறிவிப்பின்படி புதுச்சேரியில் அரசு பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் 2 ரூபாயும், அதிகபட்சமாக 8 ரூபாயும்  உயர்த்தப்பட்டது. ஏசி அல்லாத நகர பேருந்துக்கான கட்டணம் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்சமாக ரூபாய் 13 லிருந்து 17 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.




அரசு ஏசி பேருந்துகளில் அதிகபட்சமாக கட்டணம் ரூபாய் 26 இல் இருந்து 34 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் டீலக்ஸ் ஏ.சி, பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 12-ல் இருந்து 16 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 36-ல் இருந்த 47 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் பேருந்து கட்டணம் 10 ரூபாயும், சென்னைக்கு செல்லும் பேருந்துக்கு கட்டணம் ரூபாய் ஐந்து ரூபாயும், கடலூருக்கு செல்லும் பேருந்து கட்டணம் இரண்டு ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. ‌ இந்தப் பேருந்து கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்