N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?
சென்னை: புதுச்சேரி அரசியல்வாதியான புஸ்ஸி ஆனந்த், இன்று தமிழ்நாட்டின் அமைச்சராகி வரலாறு படைத்துள்ளார். அதேசமயம், அவர் திமுகவை வெல்வது இது முதல் முறையல்ல என்ற சுவாரஸ்ய தகவல் உங்களுக்குத் தெரியுமா.
புதுச்சேரியைச் சேர்ந்தவர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த். முதல்வர் ரங்கசாமியின் ஆரம்ப கால சிஷ்யர்களில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டார். அந்தக் கட்சி சார்பில் 2006ம் ஆண்டு, புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டார்.
அந்தத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டவரான அன்னிபால் கென்னடியை 11 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அதன் பிறகு அதே தொகுதியில் மேலும் 2 முறை போட்டியிட்டார் ஆனந்த். இரண்டு முறையும் அவர் சுயேச்சையாகப் போட்டியிட்டார். ஆனால் இரண்டிலும் அவர் தோல்வியே தழுவினார். அந்த இரண்டு தேர்தல்களிலும் அதிமுக வேட்பாளரான ஏ. அன்பழகனிடம் தோற்றார் புஸ்ஸி ஆனந்த்.
தற்போது மீண்டும் வரலாறு திரும்பியுள்ளது. தனது தேர்தல் அரசியல் வரலாற்றில் ஆனந்த் வென்றது தவெகவுக்கு முன்பு ஒரு முறை மட்டுமே. அதில் அவர் திமுகவை தோற்கடித்திருந்தார். தற்போது மீண்டும் அவர் தமிழ்நாட்டில் பெற்ற 2வது வெற்றியும் திமுகவை எதிர்த்துதான் என்பது மிக மிக சுவாரஸ்யமானது.
புதுச்சேரி அரசியலில் அறிமுகமாகி, விஜய்யுடன் இணைந்து இன்று தமிழ்நாட்டு அரசியல்வாதியாகி, எம்எல்ஏவாகி, இப்போதும் அமைச்சராகி அசத்தியுள்ளார் ஆனந்த். அவரது அரசியல் வரலாற்றில் நிச்சயம் இது ஒரு சாதனைதான். இந்த சாதனைக்கு முழுக்க முழுக்க விஜய்தான் காரணம் என்பதையும் அவர் பெருமையாகவே சொல்லி வருகிறார்.