CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!
சென்னை : தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த வரலாற்று நிகழ்வு ஒரு வழியாக இன்று அரங்கேறி விட்டது. நேரு ஸ்டேடியத்தில் நடந்த பிரமாண்ட விழாவில், "C ஜோசப் விஜய் எனும் நான்..." என்று சொல்லி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். இந்த பதவியேற்பு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி, தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றது. இருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலமான 118 இடங்கள் தவெக.,விற்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் தமிழக கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரினார் விஜய். பதவியேற்ற பிறகு ஒரு வாரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் அவர் கூறி இருந்தார். ஆனால் பெரும்பான்மை பலத்துடன் வந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறி விட்டார்.
இதனால் பெரும்பான்மை பெறுவதற்காக மத சார்பற்ற கட்சிகளாக காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகளிடம் தவெக சார்பில் ஆதரவு கேட்கப்பட்டது. 5 இடங்களை வைத்துள்ள காங்கிரஸ் முதல் ஆளாக ஆதரவு தெரிவித்தது. அதற்கு பிறகு பல கட்ட பேச்சுவார்த்தை, இழுபறிக்கு பிறகு ஒரு வழியாக மே 08ம் தேதியன்று மாலை இடதுசாரி கட்சிகளும், மே 09ம் தேதியன்று மாலை விசிக.,வும் தங்களின் ஆதரவை தெரிவித்தன. திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி முதலில் தவெக.,விற்கு ஆதரவு மறுத்த நிலையில், நேற்று அந்த கட்சியும் ஆதரவு அளிப்பதாக கடிதம் அனுப்பியது.
தமிழகத்தில் தவெக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போது யாரும் எதிர்பாராத விதமாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அளித்த ஆதரவு காரணமாக தவெக.,வின் பெரும்பான்மை பலம் 120 ஆக அதிகரித்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு கவர்னர் அளித்திருந்த காலக் கெடு இன்றுடன் நிறைவடைவதால், நேற்று மாலையே உடனடியாக ஆதரவு கட்சி தலைவர்ளுடன் சென்று கவர்னரை சந்தித்து, மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய். விஜய்யின் கோரிக்கையை ஏற்று கவர்னரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். அதோடு மே 11ம் தேதி சட்டசபை உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு நடக்கும், மே 12ம் தேதி சட்டசபையில் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
மே 10ம் தேதியான இன்றுடன் நடப்பு சட்டசபையின் பதவிக்காலம் நிறைவடைவதால், இன்றே பதவியேற்று விழாவை நடத்த திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. இதையடுத்து தேசிய கீதம் பாடப்பட்டது. அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து முழங்கிய பின்னர் முதல்வர் பதவியேற்பு விழா தொடங்கியது.
விழாவில் முதலில் தவெக தலைவர் விஜய், தமிழகத்தின் 17வது முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். தவெகவினரின் அடங்காத ஆரவாரத்துக்கு மத்தியில் அவரது பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது. அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்லேகர், பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.சி ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லி விஜய் பதவியேற்றுக் கொண்டபோது கூட்டம் ஆரவாரித்து உற்சாகத்தை வெளிப்படுத்தியது.
விஜய்யை தொடர்ந்து அவரது கட்சியை சேர்ந்த செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டார்கள்.