Case against Vijay: தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்?.. தலைமை தேர்தல் அதிகாரி கேள்வி
சென்னை : தவெக தலைவர் விஜய் மீது எந்த அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் அதிகாரி கேள்வி எழுப்பி உள்ளார். தவெக.,வினர் அளித்த புகாரின் அடிப்படையில் விளக்கம் அளிக்க போலீசார் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை நேற்று விஜய் துவக்கினார். நேற்று தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, அங்கு பிரச்சாரத்தை துவக்கிய விஜய், பிறகு முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். கொளத்தூர் தொகுதியில் தவெக.,வினர் அனுமதி பெற்ற 5 ஒலிப்பெருக்கிகளை மீறி 30 ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட தேர்தல் விதிகளை மீறியதாக விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதே போல் பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளர் பிரகாசம் மீது பாலியல் புகார் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகியான பிரகாசம் கடந்த ஜூன் மாதம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் விதிகளை மீறி நடந்து கொண்டதாக தவெக.,வினர் 5000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது போலீசார் பாரபட்சம் காட்டுவதாக தவெக.,வினர் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது.
தவெக.,வினர் அளித்த புகாரின் பேரில், கொளத்தூர் தொகுதியில் என்ன நடந்தது? விஜய் மீது எந்த அடிப்படையில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என போலீசார் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டார்.
விஜய் உள்ளிட்ட தவெக.,வினர் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.