தொண்டர் உயிரிழந்த சம்பவம்... ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு!

Meenakshi
Jun 23, 2025,02:33 PM IST

குண்டூர்:  டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த நிலையில், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தை சேர்ந்த ஓய்.எஸ்.ஆர்.சி.பி தொண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக ஜெகன்மோகன் ரெட்டி நேற்று நேரில் வந்தார். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி காரை தொடர்ந்து தொண்டர்கள் கூட்டத்தில், செவி சிங்கையா (55) என்பவர் தவறி விழுந்து, கார் சக்கரத்தில் சிக்கினார்.




இதனையடுத்து சிங்கையாவை போலீசாரும்,  ஓய்.எஸ்.ஆர்.சி.பி ஆதரவாளர்களும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே சிங்கையா உயிரிழந்தார். இந்த நிலையில், சிங்கையா ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கியதும், இந்த சம்பவத்தை கவனிக்காமல் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி தொண்டர்களை பார்த்து கையை அசைத்த  வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது.


இந்நிலையில், உயிரிழந்த தொண்டரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில்,  ஜெகன்மோகன் ரெட்டி, கார் ஓட்டுநர் ரமணா ரெட்டி, முன்னாள் எம்பி சுப்பா ரெட்டி உள்பட 6 பேர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.