முதல்வர் விஜய், உதயநிதி உட்பட 55 எம்எல்ஏ.,க்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு

Su.tha Arivalagan
Jun 27, 2026,01:46 PM IST

சென்னை: தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 55 சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 55 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் தேர்வு முறைகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி இந்த வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


முக்கிய தலைவர்களின் வெற்றிகளுக்கு சவால் :


இந்த அதிரடி சட்டப் போராட்டத்தில் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய்,  பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஆகியோரின் வெற்றியை எதிர்த்து வழக்குப்பதி செய்யப்பட்டுள்ளது. 


அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு




முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமின்றி, தற்போதைய அமைச்சரவையில் உள்ள முக்கிய நபர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வெற்றியை எதிர்த்தும் இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், மரிய வில்சன் ஆகியோரின் வெற்றிகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அதே போல் முன்னாள் அமைச்சர்களான அன்பில் மகேஸ் மற்றும் பெரியகருப்பன் ஆகியோரது தேர்தல் வெற்றிகளையும் எதிர்த்து நீதிமன்றக் கதவுகள் தட்டப்பட்டுள்ளன.


தவெக எம்.எல்.ஏ.க்களின் வெற்றிகளுக்கும் எதிர்ப்பு :

இவர்களோடு சேர்த்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் (எம்.எல்.ஏ.க்கள்) தேர்தல் வெற்றிகளையும் எதிர்த்து இந்த 55 வழக்குகளின் பட்டியலில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


அரசியல் அரங்கில் அடுத்த கட்டம் என்ன?

ஒரே நேரத்தில் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் என 55 எம்.எல்.ஏ.க்களின் பதவிகளுக்கு சவால் விடும் வகையில் இத்தனை தேர்தல் வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த மனுக்கள் விரைவில் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மனுதாரர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்னென்ன என்பதும், அதற்கு நீதிமன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அளிக்கப்போகும் விளக்கங்களும் தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதனால் சென்னை உயர் நீதிமன்ற வளாகம் மற்றும் தமிழக அரசியல் களம் தற்போது உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.