தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்தியவர் விஜய்: செங்கோட்டையன் ஓபன் டாக்!

Su.tha Arivalagan
Jan 21, 2026,05:06 PM IST

சென்னை: தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்திய காரணத்தின் அடிப்படையில் இப்போது விஜயுடன் இணைந்திருக்கிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து செங்கோட்டையன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், 50 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட போது இரவு முழுவதும் கண்ணீர்விட்டு அழுதேன். தூக்கம் இன்றி இருந்தேன். அதன்பின் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்த பின், இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்திய காரணத்தின் அடிப்படையில் இப்போது விஜயுடன் இணைந்திருக்கிறேன்.




ஒரு மாதமாக விஜய் எதுவும் பேசவில்லை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் 2 முறை டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஜனநாயகன் படம் ரிலீஸாகவில்லை. விரைவில் தேதி முடிவு செய்துவிட்டு பணிகளை தொடங்குவார். அதேபோல் தவெகவுக்கு 34 சதவிகித வாக்குகள் இருக்கிறது. எங்களின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. அதேபோல் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே எங்களின் கட்சியில் இணைய முடியும். மொத்தமாக தவெகவில் மட்டும் 1.28 கோடி பேர் தவெகவில் உறுப்பினர்களாக உள்ளனர்.  இளைஞர்கள் பலரும் தவெகவில் உறுப்பினராகவில்லை. ஆனாலும் ஆதரவு தருகின்றனர்


திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தான் ஆட்சி செய்து வருகிறது. தற்போது புதிய கட்சிக்கான தேவை வந்துள்ளது. இளைஞர்கள், பெண்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியவை இருந்தது. ஆனால் வெற்றி மீது வெற்றியை எம்ஜிஆர் பெற்றார். அதுபோல் திமுக, அதிமுக இருந்தாலும், விஜய் அரசியலுக்குள் வந்துள்ளார். மக்களுக்கு விஜய் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. தவெகவில் இணைய பல்வேறு தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள். அதற்கான கால, நேர, சூழலை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.