முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

Su.tha Arivalagan
Jul 31, 2026,05:31 PM IST

பெங்களூரு : காவிரி நதி நீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதல்வர் விஜய் தற்போது கர்நாடகா வர வேண்டாம் என அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது கர்நாடகாவில் நிலை சரியில்லை என்பதால் இங்கு வர வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 


காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நிலவி வரும் பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு உடனடியாக நீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு தங்களுக்கு பெரும் வேதனையளிப்பதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.


காவிரி ஆணைய உத்தரவும் கர்நாடகாவின் நிலைப்பாடும்:




தமிழ்நாட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட காவிரி நீரை திறந்து விடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், கர்நாடகாவில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லை என்றும், இதனால் தமிழகத்திற்கு நீர் திறந்து விட முடியாத சூழல் நிலவுகிறது என்றும் அம்மாநில அரசு வாதிட்டு வருகிறது.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், "காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகாவில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அணைகளின் நீர்மட்டம் குறித்து தெளிவான வாதங்களை முன்வைத்தோம். போதிய நீர் இருப்பு இல்லாததால் தமிழ்நாட்டிற்கு நீர் விட தயாராக இல்லை என்பதை ஆணையத்திடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டோம். இருப்பினும் எங்களது வாதங்களை ஆணையம் ஏற்கவில்லை. தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க வேண்டும் என்ற ஆணையத்தின் உத்தரவு மிகவும் வேதனையளிக்கிறது. எனவே, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.


முதலமைச்சர் விஜய் வருகை தள்ளிவைப்பு:


இதனிடையே, காவிரி பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த தமிழக முதலமைச்சர் விஜயின் கர்நாடக வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இரு மாநிலங்களுக்கும் இடையே சுமுகமான சூழல் இல்லாததால், முதலமைச்சர் விஜய் இப்போது கர்நாடகா வர வேண்டாம் என்றும், இந்த சந்திப்பை தள்ளி வைக்கலாம் என்றும் டி.கே.சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். சூழல் சீரடைந்த பிறகு, இரு மாநிலங்களும் பயன்பெறும் வகையில் வேறொரு நன்னாளில் இந்த உயர்நிலை சந்திப்பு நடைபெறும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

காவிரி விவகாரம் குறித்து முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல உள்ளதாக வெளியான தகவலை அடுத்து கர்நாடகாவின் பல பகுதிகளில் விஜய்யின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. அதே போல் கர்நாடகாவில் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகி உள்ள தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


தொடரும் அரசு அதிகாரிகள் கட்ட பேச்சுவார்த்தை:


அரசியல் ரீதியிலான சந்திப்புகள் தள்ளி வைக்கப்பட்ட போதிலும், காவிரி விவகாரம் தொடர்பாக இரு மாநில தலைமைச் செயலாளர்களும் தொடர் தொடர்பில் இருந்து வருகின்றனர். நீர் பங்கீடு மற்றும் அணைகளின் நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர்கள் அளவில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய உள்ள நிலையில், காவிரி நீர் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.