குழந்தைகள் தினம்.. நல்ல நல்ல பிள்ளைகளை உருவாக்கும் பெற்றோர்களுக்கும் முக்கியமான நாள்!

Swarnalakshmi
Nov 14, 2025,11:25 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


இன்று குழந்தைகள் தினம்.. அதாவது  Children's Day. 


ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தன்று "குழந்தைகள் தினமாக" இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.


"குழந்தைகள் நலமே முக்கியம் "என்றும் குழந்தைகள் மீது அவர் காட்டிய அபரிவிதமான அன்பை  வெளிப்படுத்தும் விதமாக குழந்தைகள் தினம் நேருஜியின் பிறந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் குழந்தைகள் தினம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.


"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி..

சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி "....




"அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் 

 இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம் பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்...." என்று கவிஞர் வாலி அவர்கள் குழந்தைகளுக்காக எழுதிய திரைப்பட பாடலை குழந்தைகள் தினமான இன்று நினைவு கொள்வோமாக. 


இந்த நாள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் உரிமைகளை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூகத்தில் அவர்கள் நற்  சிந்தனையாளர்களாக உருவாக்கும் பெற்றோர்களுக்கும் முக்கியமான நாளாகும்.


"இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம், நாம் அவர்களை வளர்க்கும் விதம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்" என்று கூறிய இந்தியாவின் முதல் பிரதமரான  ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி (1889) (இடம் பிரயாக் ராஜ் )இந்தியா முழுவதும்" குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.


ஆனால் ஐ.நா.நிறுவனம் குழந்தைகள் தினத்தை நவம்பர் 20ஆம் தேதி சிறப்பித்து இருந்தது. 1956 ஆம் ஆண்டுக்கு முன்பு நவம்பர் 20ஆம் தேதி இந்தியாவில் "குழந்தைகள் தினம்" கொண்டாடப்பட்டது. குழந்தைகள் மீது ஜவஹர்லால் நேரு கொண்டிருந்த அளவற்ற அன்பின் காரணமாக, பண்டிட் நேருஜி 1964ஆம் ஆண்டு மறந்ததை தொடர்ந்து அவரது பிறந்த நாளை நினைவு கூ ரும்  வகையில் இந்தியாவில் இந்த நாளில் (நவம்பர் 14) "குழந்தைகள் தினம்" மாற்றியமைக்கப்பட்டது.


"ஒரு கள்ளம் கபடமற்ற குழந்தையின் வடிவில் இறைவன் வாழ்கிறார்". எதிர்கால தேசத்தை ஆள்பவர்கள் இன்றைய குழந்தைகள். அவர்கள் புத்திசாலித்தனமாகவும், புதுமையான ஆற்றல் உடையவராகவும் வளர வேண்டும்.ஒரு நாட்டின் எதிர்காலத்தை,நாட்டின் வளர்ச்சியை தீர்மானிப்பவர்களும் அவர்களே.


"இந்தியாவின்  நாளைய  எதிர்காலம் சிறுவர்களே" என டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் குழந்தைகளைப் பற்றி எப்போதும் கூறியதை நினைவில் கொள்வோமாக.


குழந்தைகள் மீதான  நேருவின் அன்பு :


பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலன், கல்வி மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவர்கள் குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டிருந்தார். குழந்தைகளும் அவரை "சாச்சா நேரு "(நேரு மாமா) என்று மிகுந்த அன்புடன் அழைத்தனர். நேருஜி அவர்கள் அணியும் வெண்ணிற மேலாடையில் எப்பொழுதும் "சிகப்பு ரோஜா "அணிந்திருப்பார். குழந்தைகளும் அவருக்கு ரோஜா மலர்களை கொடுத்து மகிழ்வார்கள். 1964இல் நேருவின் மறைவுக்கு பிறகு அவருடைய பிறந்தநாளை( நவம்பர் 14 ) இந்தியாவில் அதிகாரப்பூர்வ குழந்தைகள் தினமாக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


குழந்தைகள் தின கொண்டாட்டங்கள் :


இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் பின்வரும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து கொண்டாடி மகிழ்கின்றனர். பள்ளிகளில் கலாச்சார நிகழ்ச்சிகள்,கதை, கவிதை,கட்டுரை போட்டி, ஓவிய போட்டி,வினாடி வினா,நாடகங்கள், நடனம்,பாடல் மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடுகின்றனர்.


நேரு மாமாவைப் போன்று உடை அணிந்து நடத்தும் மாறுவேட போட்டிகள்.

மாணவர்களுக்காக ஆசிரியர்கள் நிகழ்த்தும் பல்வேறு நிகழ்ச்சிகள்.

குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து மிக்க உணவுகள்,மற்றும் சமத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

குழந்தைகள் தினத்தைப் பற்றிய பேச்சு போட்டிகள்.

இவ்வாறு இந்த மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி" குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.

போட்டிகளில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு பரிசுகள், பாராட்டுக்கள் வழங்கி சிறப்பித்தல். என்று குழந்தைகள் தின கொண்டாடப்படுகிறது.


ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான அழகான பூக்கள், அவை அனைத்தும் சேர்ந்து இந்த உலகத்தையே ஒரு அழகான பவித்திரமான தோட்டமாக மாற்றுகின்றன".


இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால்  நேரு அவர்களின் சிறப்பு பெயர்களை நினைவில் கொள்வோம்... பண்டிட் நேரு",/" பண்டிதர் நேரு", " இந்தியாவின் ஆபரணம் ","ரோஜாவின் ராஜா ","ஆசியஜோதி", "சமாதான புறா", மற்றும் "நவீன இந்தியாவின் சிற்பி".


குழந்தைகளைப் பற்றி நேருஜி கூறியவை :


 "குழந்தைகள் என்பவர்கள் ஒரு நாட்டில் எதிர்காலம் மற்றும் மிகப்பெரிய சொத்து "என்று நேருஜி கூறினார்.

 "நாளைய உலகை ஆளப்போகும் இன்றைய குழந்தைகள் ஒரு தேசத்தின் நாளைய குடிமக்கள் "என்பதால் அவர்களை கவனமாகவும், அன்பாகவும் வளர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். நேருவின் இந்த கருத்து குழந்தைகள் மீது அவருக்கு இருந்த மிகுதியான பாசத்தையும், குழந்தைகளின் கல்வி மற்றும் நலனில் அவர் கொண்டிருந்த அக்கறையையும் காட்டுகிறது.

 "குழந்தைகள் ஒரு தோட்டத்தில் உள்ள மொட்டுக்கள் போன்றவர்கள்" என்றும் அவர்களை மிகவும் கவனமாகவும், அன்பாகவும் வளர்க்க வேண்டும் என்றும் நேருஜி கூறியிருந்தார்.


 "குழந்தைகளை சீர்திருத்த ஒரே வழி அவர்களை அன்பால் வெல்வதுதான். ஒரு குழந்தை  நட்பின்றி  இருக்கும் வரை அவர்களது வழிகளை உங்களால் சரி செய்ய முடியாது ".  இவ்வாறு  குழந்தைகளின் வளர்ப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


குழந்தைகளின் கல்விக்காக ஆயிரக்கணக்கான பள்ளிகளை கட்டினார். ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்காக குழந்தைகளுக்கு இலவசமாக பால் மற்றும் உணவு வழங்குதல் போன்ற முயற்சிகளையும் மேற்கொண்டார். குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சியை குறித்து பல திட்டங்கள் அமைத்திருந்தார்.நேருஜி தன்னுடைய மகள் இந்திரா காந்தி அவர்களுக்கு எழுதிய கடிதங்களில் குழந்தைகள் மீது அவர் கொண்டுள்ள அன்பை உலகிற்கு காட்டினார். இன்றும் அவை    என்றும் அழியா புகழாக   நிலைத்திருக்கின்றன.


நாட்டில் தலை சிறந்து விளங்கும் எய்ம்ஸ்,ஐஐடி, மற்றும் ஐஐஎம் உள்ளிட்ட முக்கிய கல்வி நிறுவனங்கள் உருவாக காரணமாக இருந்தவரும் நேருஜி அவர்களே. சரியான கல்வி மூலம் மட்டுமே சமுதாயத்தில் நல்லதொரு ஒழுங்கை உருவாக்க முடியும் என்பதை தீர்க்கமாக நம்பினார்.


அனைத்து குழந்தைகளுக்கும் தென் தமிழ் சார்பாக குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.