கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

Su.tha Arivalagan
Mar 09, 2026,05:52 PM IST

புதுடில்லி: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் பொருட்டு, சிலிண்டர் முன்பதிவு செய்யும் முறைகளில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. நாட்டில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் எரிவாயு தேவையை கருத்தில் கொண்டு, வீட்டு உபயோக வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


முன்னுரிமை யாருக்கு?


கடந்த வாரம் வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டர்களின் விலையை ரூ.60 உயர்த்தி பெட்ரோல் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டன. இது சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு (IOC, BPCL, HPCL) வழங்கியுள்ள அறிவுறுத்தலின்படி, வணிக ரீதியிலான (Commercial) சிலிண்டர் உற்பத்தியைக் குறைத்து, வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு (Domestic) முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் சாமானிய மக்கள் சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.


புதிய முன்பதிவு விதிகள் :




மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, ஒரு சிலிண்டரை முன்பதிவு செய்து அது டெலிவரி செய்யப்பட்ட பிறகு, அடுத்த சிலிண்டரை உடனடியாக முன்பதிவு செய்ய முடியாது. இதற்கான கால அவகாசம் மாற்றப்பட்டுள்ளது:


- ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள்: சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட நாளிலிருந்து 21 நாட்கள் கழித்தே அடுத்த ரீஃபில் (Refill) முன்பதிவு செய்ய முடியும்.

- இரண்டு சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள்: ஒரு சிலிண்டர் பெற்ற பிறகு, அடுத்த முன்பதிவு செய்ய 30 நாட்கள் காத்திருக்க வேண்டும்.


ஏன் இந்த மாற்றம்?


சமீப காலமாக நிலவி வரும் சர்வதேச சூழல் மற்றும் எரிவாயு விலை உயர்வு குறித்த அச்சத்தால், பல வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே சிலிண்டர்களை முன்பதிவு செய்து பதுக்கி வைப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால் விநியோகச் சங்கிலியில் தேவையற்ற அழுத்தம் ஏற்பட்டு, உண்மையான தேவையுள்ளவர்களுக்கு சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதைத் தவிர்க்கவே இந்த 'லாக்-இன்' (Lock-in) காலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


- OTP கட்டாயம்: சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் போது, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை வழங்கினால் மட்டுமே சிலிண்டர் விநியோகிக்கப்படும்.

- மின்-கேஒய்சி (e-KYC): கேஸ் இணைப்புகளுக்கான e-KYC சரிபார்ப்பை முடிக்காதவர்கள் உடனடியாக முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- ஆன்லைன் முன்பதிவு: முன்பதிவு மென்பொருளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய முயன்றால் சிஸ்டம் அதனை ஏற்றுக் கொள்ளாது.


இந்த புதிய விதிகள் ஏற்கனவே செயல்பாட்டிற்கு வந்துவிட்டதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, பொதுமக்கள் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்து மாறும், தேவையற்ற அச்சத்தில் முன்கூட்டியே முன்பதிவு செய்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.