சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

Su.tha Arivalagan
Apr 23, 2026,05:02 PM IST

டெல்லி: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட உள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.


இது குறித்து அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்  பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:


சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட உள்ளதாகச் சில செய்திகள் பரவி வருகின்றன. அதுபோன்ற எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்துகிறோம். இத்தகைய செய்திகள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பீதியையும் உண்டாக்கும் நோக்கில் பரப்பப்படும் விஷமத்தனமான மற்றும் தவறான தகவல்கள் ஆகும்.




சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும், கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாத ஒரே நாடு இந்தியாதான். இந்தியக் குடிமக்களைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.


எனவே, சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறும் மத்திய அரசு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.