புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
- அ.சீ.லாவண்யா
புதுடெல்லி: புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கான ஊதியம் தாமதமாக வழங்கப்படும் சூழ்நிலையில், அதற்கான இழப்பீடும் சேர்த்து வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், வேலை செய்து முடித்த பிறகு ஊதியம் தாமதமாகக் கிடைப்பதால் ஏற்படும் பொருளாதார சிரமங்களை குறைக்கும் நோக்கில், இழப்பீடு வழங்கும் நடைமுறை தெளிவாக செயல்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
அதே நேரத்தில், 125 நாள் வேலை திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக வேளாண் சாகுபடி தொடர்பான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் வருமானம் மற்றும் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
ஊதியம் காலத்துக்குள், இழப்பீட்டுடன் கிடைக்கும் உறுதி மற்றும் வேளாண் பணிகளுக்கான முன்னுரிமை ஆகியவை, கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் புதிய அத்தியாயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(அ.சீ. லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து
நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)