NEET.. நீட் தேர்வு முறையில் பெரும் மாற்றம் வருகிறது.. அடுத்த ஆண்டு முதல் கம்ப்யூட்டரில் தேர்வு!
டெல்லி: நீட் தேர்வு முறையை அடுத்த ஆண்டு முதல் முழுமையாகக் கணினி வழியில் (Computer-Based Test) நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது மத்திய அரசு குறிப்பிட்ட தேர்வு மையங்களை அறிவிக்கும். அந்தத் தேர்வு மையங்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் மூலம் நீட் தேர்வை நாம் எழுத வேண்டும். பேப்பர் பேனாவுக்கு இதில் வேலை இருக்காது. மாறாக கேள்வித்தாள் அந்த கம்ப்யூட்டர்களில் மட்டுமே இருக்கும். அதில் நாம் விடை எழுத வேண்டியிருக்கும்.
வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணைகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போதுள்ள பேனா மற்றும் பேப்பர் முறையில் வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு, பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படும்போது வினாத்தாள் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. கணினி வழித் தேர்வில் இந்த ஆபத்து பெருமளவு குறையும்.
நீட் தேர்வை மிகவும் பாதுகாப்பாகவும், வெளிப்படையாகவும் நடத்த உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது. எனவே கணினி வழித் தேர்வு முறையால் விடைகளைத் திருத்தும் பணி எளிதாகும், இதனால் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.
நடப்பாண்டு நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதால் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் மறு தேர்வுக்கு உத்தரவிடப்பட்டுள்து. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது தேர்வை முற்றிலும் கம்ப்யூட்டர் அடிப்படையிலான டெஸ்ட்டாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மாணவர்களின் நலனைப் பாதுகாப்பதே எங்களின் முன்னுரிமை. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க முடியும். எனவே, அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு முழுமையாகக் கணினி மயமாக்கப்படும் என்று தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட தேர்வு மையங்களில் நீட் தேர்வை ஆன்லைனில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் மறு தேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.