நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஜி.எஸ்.டி சலுகை.. மத்திய அரசு பரிசீலனை
Jul 02, 2025,05:44 PM IST
டெல்லி: இந்த ஆண்டின் தொடக்கத்தில் வருமான வரி சலுகைகளை வழங்கிய மத்திய அரசு, தற்போது நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜி.எஸ்.டி) சலுகைகளை வழங்க ஆயத்தமாகி வருகிறது என நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
12% ஜி.எஸ்.டி வரியை முற்றிலுமாக நீக்குவது அல்லது தற்போது 12% வரி விதிக்கப்படும் பல பொருட்களை குறைந்தபட்ச, 5% வரி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த மறுசீரமைப்பு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் பரவலாகப் பயன்படுத்தும் பொருட்களை இலக்காகக் கொண்டுள்ளது. குறிப்பாக பற்பசை, பற்பொடி, குடைகள், தையல் இயந்திரங்கள், பிரஷர் குக்கர்கள், சமையலறை பாத்திரங்கள், எலக்ட்ரிக் அயர்ன், கீசர்கள், குறைந்த கொள்ளளவு கொண்ட சலவை இயந்திரங்கள், சைக்கிள்கள், ₹1,000-க்கு மேல் விலையுள்ள ஆயத்த ஆடைகள், ₹500 முதல் ₹1,000 வரையிலான காலணிகள், எழுதுபொருட்கள், தடுப்பூசிகள், செராமிக் டைல்ஸ் மற்றும் விவசாயக் கருவிகள் போன்ற பல பொருட்கள் அடங்கும்.
இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டால், பல்வேறு அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாகக் குறையும். இந்த நடவடிக்கையால் மத்திய அரசுக்கு ₹40,000 கோடி முதல் ₹50,000 கோடி வரை சுமை ஏற்படும். இருப்பினும், இந்த சுமையை ஏற்க மத்திய அரசு தயாராகி விட்டதாம். காரணம், இவை நீண்ட கால நுகர்வுக்கு வழி வகுக்கும் என்பதோடு ஜிஎஸ்டி வருவாயும் அதிகரிக்கும் என்பதால் மத்திய அரசு இந்த சலுகையைத் தரும் யோசனையில் உள்ளதாம்.
ஜி.எஸ்.டி-யில் வரி விகித மாற்றங்களுக்கு ஜி.எஸ்.டி கவுன்சிலின் ஒப்புதல் தேவை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் இதில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. தற்போது, பஞ்சாப், கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி.எஸ்.டி கவுன்சில் வரலாற்றில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே வாக்களிப்பு நடைபெற்றுள்ளது. மற்ற அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே எட்டப்பட்டுள்ளன.
இந்த விவாதம் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள 56வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கவுன்சிலை கூட்ட குறைந்தபட்சம் 15 நாட்கள் முன்னறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது விதி.
இந்தியாவில் தற்போது 12% ஜி.எஸ்.டி வரி வரம்பில் உள்ள பொருட்களின் பட்டியல்:
பற்பொடி
சுகாதார நாப்கின்கள்
ஹேர் ஆயில்
சோப்புகள்
பற்பசை
குடைகள்
தையல் இயந்திரங்கள்
நீர் வடிகட்டிகள் மற்றும் சுத்திகரிப்பான்கள் (மின்சாரம் அல்லாத வகைகள்)
பிரஷர் குக்கர்கள்
அலுமினியம், எஃகு பாத்திரங்கள்
எலக்ட்ரிக் அயர்ன்
நீர் சூடேற்றிகள் (கீசர்கள்)
வேக்யூம் கிளீனர்கள் (குறைந்த கொள்ளளவு, வணிகரீதியானவை அல்ல)
சலவை இயந்திரங்கள் (சிறிய கொள்ளளவு)
சைக்கிள்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கான வண்டிகள்
பொது போக்குவரத்து வாகனங்கள் (விற்கப்படும் போது, கட்டணத்திற்கு அல்ல)
ஆயத்த ஆடைகள் (₹1,000-க்கு மேல் விலை)
₹500 முதல் ₹1,000 வரையிலான காலணிகள்
பெரும்பாலான தடுப்பூசிகள்
எச்.ஐ.வி, ஹெபடைடிஸ், காசநோய் கண்டறியும் கருவிகள்
சில ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துகள்
பயிற்சிப் புத்தகங்கள்
ஜியோமெட்ரி பெட்டிகள்
வரைதல் மற்றும் வண்ணமயமாக்கல் புத்தகங்கள்
வரைபடங்கள் மற்றும் உலக உருண்டைகள்
பளபளப்பான ஓடுகள் (அடிப்படை, ஆடம்பரமற்ற வகைகள்)
ரெடி-மிக்ஸ் கான்கிரீட்
முன் தயாரிக்கப்பட்ட கட்டிடங்கள்
மெக்கானிக்கல் த்ரெஷர்கள் போன்ற விவசாய உபகரணங்கள்
சுருக்கப்பட்ட பால், உறைந்த காய்கறிகள் (சில வகைகள்) போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகள்
சோலார் வாட்டர் ஹீட்டர்கள்.