மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் சந்தோஷம்.. டிஏ உயர்வு மற்றும் 8வது ஊதியக் குழு!

Su.tha Arivalagan
Sep 19, 2025,10:32 AM IST

டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்தத் தீபாவளி கூடுதல் மகிழ்ச்சியைத் தரும். அகவிலைப்படி (DA) உயர்வு மற்றும் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


DA (Dearness Allowance) என்பது, விலைவாசி உயர்வால் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஒரு கூடுதல் தொகை. இது ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் செப்டம்பர் என இரண்டு முறை திருத்தப்படும். தற்போது, DA 55% ஆக உள்ளது. தீபாவளிக்கு முன் 3% அதிகரித்து, 58% ஆக உயர வாய்ப்புள்ளது. இந்த உயர்வால் சுமார் 1.2 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள்.


DA என்பது குறுகியகால நிவாரணம். ஆனால், ஊதியக் குழு என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் பெரிய, நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்தும். தற்போது 8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுவின் மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 30% முதல் 34% வரை உயர வாய்ப்புள்ளது.


என்னென்ன மாற்றங்கள் வரும்?




குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் தற்போதுள்ள ₹18,000-லிருந்து ₹51,480 ஆக உயரக்கூடும். குறைந்தபட்ச ஓய்வூதியம் என்பது தற்போது உள்ள  ₹9,000-லிருந்து ₹25,740 ஆக உயர வாய்ப்புள்ளது. இது 2.57-லிருந்து 2.86 ஆக உயர்த்தப்படலாம். (உதாரணமாக, உங்கள் தற்போதைய சம்பளத்தை 2.86 ஆல் பெருக்கி புதிய சம்பளம் நிர்ணயிக்கப்படும்.)


யாருக்குப் பயன் கிடைக்கும்?


சுமார் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள், ஆக மொத்தம் 1.15 கோடி பேர் இதனால் பயனடைவார்கள். 8வது ஊதியக் குழுவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. நிதி நிலைமையைப் பொறுத்து இந்த முடிவுகள் மாறலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.