உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேலும் வலுவடைந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஒரிசா பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
செப்டம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்டம்பர் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 4 முதல் 9ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் செப்டம்பர் 6ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மத்தியமேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கொங்கன்- கோவா – கர்நாடக கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், ஆந்திரா – ஒரிசா – மேற்கு வங்காள கடலோரப்பகுதிகள், வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். ஆகையால், இப்பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.